4 Oct 2013

நூல்கள் -பட்டினத்து அடிகள்

           பட்டினத்து அடிகள் பாடியனவாக பதினொன்றாம் திருமுறைப் பிரபந்தங்களையன்றி வேறுபல பாடல்களுடன் வெளிவந்துள்ள பட்டினத்தார் பாடல் என்ற நூல் பிற்காலப் புலவர் சிலரால் பாடித் தொகுக்கப்பட்டது. இந்நூலில் உள்ள பிரபந்தப் பாடல்கள் உயர்ந்த நடையில் விளங்குதலையும், அந்நூற் பாடல்கள் சாதாரண மக்கள் வழக்கில் பாடப் பட்டிருத்தலையும் சுட்டிக்காட்டி பட்டினத்தார் பாடல்கள் என வழங்கும் நூல் பிற்காலப் புலவர் ஒருவரால் செய்யப் பெற்று அடிகள் பெயரில் வழங்கப்படுவதாகும் என ஆய்வறிஞர்கள் கருதுவர்.

11 Sept 2013

பரிகலச் சிறப்பு -பட்டினத்து அடிகள்

                    சில ஆண்டுகளுக்குப்பின் அப்பெண் தந்தையோடு திருவிடைமருதூர் வந்து பத்திரகிரியாரைப் பணிந்து `அடிநாய் மீண்டும் திருவடிப்பேற்றுக்கு வந்துள்ளது` எனக் கூற பத்திரகிரியார் அப்பெண்ணைப் பட்டினத்து அடிகளிடம் அழைத்து வந்து ஞானிகளின் பரிகலம் உண்ட சிறப்பால் அரச மரபில் பிறந்து வளர்ந்துள்ள இப் பெண்ணுக்கு வீடுபேறு அருளுமாறு வேண்ட அங்கு ஒரு சிவசோதி தோன்றியது. அப்பெண் அச்சோதியில் கலந்து வீடு பெற்றார். பத்திரகிரியாரும் குருநாதர் ஆணைப்படி அச்சோதியில் கலந்து இறையடிப் பேற்றை எய்தினார்.

                   அடிகள் இறைவன் கருணையை வியந்து `என்னையும் என் வினையையும் இங்கு இருத்தி வைத்தனை போலும்` என இரங்கிக்கூற சிவபிரான் திருஒற்றியூருக்கு அவரை வருமாறு பணித்தருளினார். அடிகள் எப்போது தனக்கு முத்தி சித்திக்கும் எனக் கேட்க பெருமான் பேய்க்கரும்பு ஒன்றை அவர் கையில் தந்து இக்கரும்பு எங்கு தித்திக்கிறதோ அங்கே உனக்கு முத்தி சித்திக்கும் எனக் கூறியருளினார். அடிகள் இறைவன் அருளியவாறு திருவொற்றியூரை அடைந்தார். அங்குச் சில நாள் தங்கினார். கடற்கரையில் இடைச் சிறுவர்களுடன் அவர் விளையாடிக் கொண்டிருந்த போது கையில் கொண்ட கரும்பு இனிக்கத் தொடங்கியது. பட்டினத்து அடிகள் இறைவன் திருவருளை எண்ணிய நிலையில் அத்தலத்தில் மணலில் மறைந்து சிவலிங்கத் திருவுருவாய் வெளிப்பட்டருளினார்.

பட்டினத்து அடிகள் காலம் கி.பி. 10 - ஆம் நூற்றாண்டின் தொடக்கமாகும்.

7 Sept 2013

குடும்பி- பட்டினத்து அடிகள்

                 ஒருநாள் சிவபெருமான் சித்தராக வந்து பட்டினத்து அடிகளிடம் உணவு வேண்ட அடிகள் `யான் கந்தையும் மிகை` என்னும் கருத்தோடு வாழும் துறவி, என்பால் ஏதுவும் இல்லை. மேலைக்கோபுர வாயிலில் ஒரு குடும்பி உள்ளான் அவனிடம் சென்று கேளும் எனக்கூற, சித்தர் அவ்வாறே சென்று அடிகள் கூறியன வற்றைத் தெரிவித்துக் கேட்ட அளவில் பத்திரகிரியார் நம்மோடு இணைந்துள்ள உணவேற்கும் ஓடும் பரிவு காட்டும் நாயும் அல்லவா நம்மைக் கும்பியாக்கின என அவ்வோட்டை கீழே எறிய ஓடு உடைந்து சிதறியது. நாயின்மீதுபட்டு நாயும் இறந்தது. சித்தர் மறைந்தார். நாய் அடியார் பரிகலம் உண்ட சிறப்பால் காசிராசன் மகளாகச் சென்று பிறந்தது.

16 Jul 2013

பத்திரகிரியார் -பட்டினத்து அடிகள்

            இரவில் பத்ரகிரி மன்னன் அரண்மனையில் அணிகலன்களைத் திருடியவர்கள் தாம் வேண்டிச் சென்று வெற்றியோடு களவாடிய அணிகலன்களில் மணிமாலை ஒன்றை விநாயகர்மீது வீசி எறிந்து சென்றனர். அம்மாலை விநாயகர் கோயிலில் தவமிருந்த திருவெண்காடர் கழுத்தில் விழுந்திருந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் திருடர்களைத் தேடி அரண்மனைக் காவலர்கள் வந்தனர். அடிகள் கழுத்தில் மணிமாலை இருத்தலைக் கண்டு அவரைக் கள்வர் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்று கருதி பிடித்துச் சென்றனர். அரசனிடம் தெரிவித்து கழுமரத்தில் அவரை ஏற்றுதற் பொருட்டு கழுமரம் இருக்கு மிடத்துக்கு அழைத்து வந்தனர். அடிகள் தான் குற்றம் செய்யாமல் இருக்கவும் தன்னைத் தண்டித்த அரசன் செயலுக்கு வருந்தி `என் செயலாவது யாதொன்றுமில்லை` என்ற பாடலைப் பாடிய அளவில் கழுமரம் தீப்பற்றி எரிந்தது. அதனை அறிந்த பத்திரகிரி மன்னன் அடி களை அடைந்து பிழை பொறுக்குமாறு வேண்டியதோடு தானும் அரசு துறந்து அடிகளைப் பணிய பத்திரகிரியாரைத் திருவிடைமருதூர் சென்று கோபுர வாயிலில் தங்கியிருக்குமாறு செய்து அங்கிருந்து புறப் பட்டுப் பல தலங்களுக்கும் யாத்திரை சென்றார். பத்திரகிரியார் கையில் திருவோடு ஒன்றை ஏந்தி இரந்துண்டு திருவிடைமருதூர்க் கோயிலில் தங்கியிருந்தார்.

                      பட்டினத்து அடிகள் பல தலங்களுக்கும் சென்று பின் திருவிடை மருதூரை அடைந்து பத்திரகிரியாரை மேலைக் கோபுர வாயிலில் இருக்கச் செய்து தான் கீழைக் கோபுர வாயிலில் இருந்தார். பத்திர கிரியார் பலர் இல்லங்கட்கும் சென்று இரந்து வந்து தன் குருநாதர்க்கு அமுதளித்து எஞ்சியதைத் தான் உண்டு மீதத்தைத் தன்னைத் தொடர்ந்து வந்த நாய் ஒன்றிற்கு அளித்து மேலைக் கோபுர வாயிலில் இருந்தார்.

13 Jul 2013

மருதப்பிரான்- பட்டினத்து அடிகள்

            திருவெண்காடர் அக்குழந்தைக்கு மருதப்பிரான் எனப் பெயர் சூட்டி அன்போடு வளர்த்து வந்தார்.

                  மருதப்பிரான் கல்வி கேள்விகளில் வல்லவராய் வாணிபத்தில் சிறந்து விளங்கினார். வணிகர் சிலரோடு கடல் வாணிபம் சென்று மீண்டார். தான் கொண்டு சென்ற கப்பலில் எரு மூட்டைகளையும் தவிட்டையும் கொண்டு வந்த தம் மைந்தரைத் தேடியபோது அவர் மனைவியார் மைந்தர் தம்மிடம் கொடுத்துத் தந்தையிடம் சேர்ப்பிக்குமாறு கூறிய பெட்டியில் நிலையாமை உணர்த்தும் பொருள்களும் அறவுரையும் இருக்கக்கண்டு உண்மை ஞானம் கைவரப் பெற்றுத் துறவறம் பூண்டார். தம் தலைமைக் கணக்கராகிய சேந்தனாரை அழைத்துத் தமது கருவூலத்தைத் திறந்து வைத்துப் பலரும் கொள்ளை கொள்ளுமாறு செய்தார். தன்னைக் கொல்லத் திட்டமிட்ட உறவினர்க்குத் தக்க பாடம் புகட்டினார். தாயார் இறந்தபோது வாழைப் பட்டைகளை அடுக்கித் தாயின் உடலை அதன் மீது வைத்துச் சில பாடல்களைப் பாடி ஞானத்தீயால் அவ்வுடலை எரித்து ஈமக்கடன்களை ஆற்றி முடித்துப் பலசிவ தலங்களையும் வழி பட்டுக் கொண்டு உஜ்ஜயினியை அடைந்து அவ்வூரின் புறத்தே இருந்த சிறு காட்டில் விநாயகர் ஆலயத்தில் தங்கித் தவ நிலையில் இருந்தார்.

4 Jun 2013

எடைக்கு எடை பொன் - பட்டினத்து அடிகள்

திருவிடைமருதூரில் தன்னை வழிபட்டுச் சிவதருமங்கள் பல செய்து வந்த அந்தணராகிய சிவசருமர் சுசீலை ஆகியோர் வறுமை நிலையில் இருப்பதை உணர்ந்து மகாலிங்கப் பெருமான் அவர்கள் கனவில் தோன்றி, நாளை தீர்த்தக் கரையில் மருத மரத்தடியில் நாமே ஒரு குழந்தையாய் இருப்போம். அக்குழந்தையைக் காவிரிப் பூம்பட்டினத்தில் வாழும் வணிகராகிய திருவெண்காடரிடம் கொடுத்து எடைக்கு எடை பொன் பெற்று வறுமையின்றி வாழ்க என அருள் புரிந்தார். விழித்தெழுந்த சிவசருமரும் சுசீலையும் அக்குழந்தையை எடுத்து அணைத்து அதனைக் கொடுக்க மனம் இன்றி முடிவில் இறைவன் கட்டளைப்படி காவிரிப்பூம்பட்டினம் வந்தடைந்து திருவெண்காடரிடம் அளித்து எடைக்கு எடை பொன் பெற்று மீண்டனர்.

18 May 2013

பிற்கால வரலாறு - பட்டினத்து அடிகள்


                  இனிப் பட்டினத்து அடிகள் வரலாற்றில் மேலும் சில செய்திகள் சேர்ந்து வழங்கக் காணலாம். மண்ணுலகில் உள்ள தலங்களைத் தரிசிக்க விரும்பிய குபேரனைச் சிவபெருமான் நிலவுலகில் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் சிவநேசர் ஞானகலாம்பிகை ஆகியோர்க்கு மகனாகப் பிறக்குமாறு செய்தருளினார். பெற்றோர் திருவெண்காடு சென்று வேண்டிப் பெற்ற பிள்ளையாதலின் திருவெண்காடர் எனப் பெயரிட்டு வளர்த்தனர். ஐந்து வயதில் தந்தையாரை இழந்த திருவெண்காடர் கல்வி பயின்று இறை உணர்வோடு வாணிபம் புரிந்து வந்தார்.

                  ஒருநாள் சிவபிரான் இவர் கனவில் அந்தணராகத் தோன்றி திருவெண்காடு வருமாறு பணிக்க அவ்வாறே திருவெண்காடர் திருவெண்காடு சென்றபோது கனவிடைத் தோன்றிய அந்தணர் காட்சி தந்து சிவதீட்சை வழங்கி அவர் கையில் ஒரு சம்புடத்தைக் கொடுத்து மறைந்தருளினார். சம்புடம் இவர் கைக்குக் கிடைத்தவுடன் தானே திறந்து கொண்டது. அதில் விநாயகர் சிவலிங்கம் இருக்கக் கண்டு திருவெண்காடர் நாள்தோறும் அவற்றைப் பூசித்து வந்தார். சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் இயற்றினார். நெடுநாள் ஆகியும் மகப்பேறு வாய்க்காமையால் இறைவனை வேண்டி வந்தார்.

17 May 2013

சிவசமாதி - பட்டினத்து அடிகள்


           திருவெண்காட்டு அடிகள் திருஒற்றியூரில் தங்கியிருந்த போது, கடற்கரையில் விளையாடும் சிறுவர்களோடு தாமும் சேர்ந்து மணலில் புதைதல் பின் வெளிப்படல் போன்ற விளையாட்டுக்களை நிகழ்த்தினார். முடிவில் சிறுவர்களைக் கொண்டு மணலால் தன்னை மூடச் செய்தார். நெடுநேரம் ஆகியும் அவர் வெளிப்படாதிருத்தலைக் கண்டு சிறுவர்கள் மணலை அகழ்ந்து பார்த்தபோது அடிகள் சிவ லிங்கமாக வெளிப்பட்டருளினார்.

16 May 2013

தன்வினை தன்னைச்சுடும் - பட்டினத்து அடிகள்

 பெருஞ்செல்வரான திருவெண்காடர் துறவு பூண்டு பலர் வீடுகளுக்கும் சென்று பிச்சை ஏற்று உண்ணுதலைக் கண்டு வெறுப்புற்ற உறவினர் சிலர் அவர்தம் தமக்கையாரைக் கொண்டு நஞ்சு கலந்த அப்பத்தை அளிக்கச் செய்தனர். அதனை உணர்ந்த அடிகள் அதனை வாங்கி `தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்` எனக் கூறி தமக்கையார் வீட்டின் இறப்பையிற் செருகிய அளவில் வீடு தீப்பற்றி எரிந்தது. அடிகள் காவிரிப்பூம்பட்டினத்தில் சிலநாள் தங்கி யிருந்து தன் தாயார் இறந்தபோது அவருக்கு ஈமக்கடன் செய்து முடித்துத் திருவிடைமருதூர் சென்று அங்குச் சில காலம் தங்கி மருதப் பிரானை வழிப்பட்டுப் பின் திருவாரூர் முதலிய தலங்களை அடைந்து அங்கிருந்தபோது முன்பு தமக்குக் கணக்கராய் இருந்த சேந்தனாரை அரசன் சிறைப்படுத்திய செய்தி கேட்டு `மத்தளை தயிருண்டானும்` என்ற பாடலைப் பாடிய அளவில் சிவகணங்கள் சேந்தனாரைச் சிறை யிலிருந்து மீட்டு அவர் முன் கொணர்ந்து நிறுத்தின. சேந்தனாரும் திருவெண்காட்டு அடிகளைப் பணிந்து `பிறவிச் சிறையிலிருந்து விடுதலை பெறும்` உபதேச மொழிகளைக் கேட்டு உய்தி பெற்றார். பின்னர் சீகாழி சிதம்பரம் கச்சி ஏகம்பம் முதலான தலங்களை வணங்கிக் கொண்டு திருஒற்றியூர் சென்றார்.

6 May 2013

காதற்ற ஊசி - பட்டினத்து அடிகள்


            சில நாட்களில் சென்றபின் அனைத்து வரட்டிகளையும் தவிட்டையும் சோதித்தபோது அவற்றுள் ஒன்றும் இல்லாதிருத்தலைக் கண்டு தன் மகன்மீது சினம் கொண்டு அவரைத் தண்டிக்கும் கருத் துடன் தனி அறையில் பூட்டி வைக்கச் செய்து வாணிபத்தைத் தான் கவனித்து வரலானார். மருதவாணரின் தாயார் அவரைக்காண அறைக்குச் சென்றபோது சிவபிரான் மருகனோடும் உமையம்மை யோடும் அங்கிருத்தலைக் கண்டு தன் கணவர்க்கு அறிவிக்க அவரும் சென்று அவ்வருட் காட்சியைக் கண்டு அறையைத் திறக்குமாறு பணித்தார். மருதவாணரிடம் தன் செயலுக்கு மனம் வருந்தி மன்னிப்பு வேண்டினார். மருதவாணர் மெய்ந்நூற்பொருளை அவருக்கு உபதேசம் செய்தார். எனினும் பெருஞ்செல்வராகிய அவர்க்கு உலகப் பற்று ஒழியாமை கண்டு காதற்ற ஊசி ஒன்றையும் நூலையும் `காதற்ற ஊசியும் வாராது காண்நும் கடைவழிக்கே` என்றெழுதிய ஒலை நறுக்கினையும் ஒரு பெட்டியில் வைத்து மூடி வளர்ப்புத் தாயிடம் அளித்துத் திருவெண்காடரிடம் அதனைச் சேர்ப்பிக்குமாறு கூறி இல்லத்தை விட்டு மறைந்து சென்றார்.

             திருவெண்காடர் மருதவாணர் அளித்ததாக மனைவி அளித்த பெட்டியை வாங்கித் திறந்து பார்த்தபோது காதற்ற ஊசி, நூல் ஆகியன வும் அறவுரை அடங்கிய ஓலை நறுக்கும் இருக்கக்கண்டு அவை உணர்த்தும் குறிப்பை உணர்ந்து இருவகைப் பற்றுக்களையும் அறவே விட்டுத் துறவறமாகிய தூய நெறியை மேற்கொண்டு ஊர் அம்பலத்தை அடைந்து அங்கேயே வாழ்ந்து வரலானார். திருவெண்காடர் தூறவு பூண்டதை அறிந்த அரசன் அவரை அணுகி `நீர் துறவறம் பூண்டதனால் அடைந்த பயன் யாது` என வினவிய போது `நீ நிற்கவும் யான் இருக்கவும் பெற்ற தன்மையே அது` என மறுமொழி புகன்றார். எல்லோரும் திருவெண்காடரைத் திருவெண்காட்டு அடிகள் என அழைத்தனர்.

5 May 2013

வரட்டியும் தவிடும் - பட்டினத்து அடிகள்

              வந்தடைந்த வணிகர்களில் சிலர் திருவெண்காடரிடம் மருத வாணர் பித்தராய் வீணே பொருளைச் செலவிட்டு தவிடும் வரட்டி யுமே வாங்கி வந்துள்ளார் என்று குறை கூறினார். திருவெண்காடர் மருதவாணர் வாங்கி வந்த வரட்டியைச் சோதித்துப் பார்த்தபோது அவற்றுள் மாணிக்கக் கற்கள் இருத்தலையும் தவிட்டைச் சோதித்த போது அதனுள் தங்கப்பொடி மறைத்து வைக்கப்பட்டிருத்ததையும் கண்டு தன் மகன் கடல் கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க இவ்வாறு செய்துள்ளான் என வியந்து அதனை வணிகர்களிடம் கூறிப் பெருமையுற்றார்.

2 May 2013

கடல் வாணிபம் -பட்டினத்து அடிகள்

          திருவெண்காடரின் மகனாக வந்தடைந்த மருதவாணர் வளர்ந்து சிறந்து வாணிபத்தில் வல்லவராய்ப் பெரும் பொருள் ஈட்டித் தம் பெற்றோரை மகிழ்வித்து வந்தார். வணிகர் சிலருடன் கடல் கடந்து சென்று வாணிபம் புரிந்து பெரும் பொருள் ஈட்டி திருக்கோயில் பணிகட்கும், சிவனடியார்கட்கும் அளித்து வந்தார். அவ்வாறு கடல் வாணிபம் செய்து வரும்போது ஒருமுறை வணிகர்கள் பலரோடு கடல் கடந்து சென்றவர் அங்கிருந்து எருமுட்டைகளையும் தவிட்டையுமே வாங்கித் தம் மரக்கலத்தில் நிரப்பிக்கொண்டு ஊர் திரும்பினார்.

           வழியில் அனைவர் மரக்கலங்களும் காற்றில் திசைமாறிப் போயின. உடன் வந்த வணிகர்கள் உணவு சமைத்தற்கு இவரிடம் கடனாக எரு மூட்டைகளை வாங்கிப் பயன்படுத்தி உணவு சமைத்தனர். சில நாட்கள் கழித்து அனைவரும் காவிரிப்பூம்பட்டினம் மீண்டனர்.

1 May 2013

சிவசருமர்- பட்டினத்து அடிகள்


                    திருவிடைமருதூரில் சிவனடித் தொண்டு பூண்டொழுகிய சிவசருமர் என்னும் அந்தணர் வறுமையால் துயருறுவதைக்கண்டு மனம் பொறாத மகாலிங்கப் பெருமான் மருதவாணர் என்னும் திருப் பெயரோடு அவர்முன் தோன்றி காவிரிப்பூம்பட்டினத்தில் மகப் பேறின்றி வருந்தும் திருவெண்காடரிடம் தன்னை விற்றுப் பொருள் பெற்று வறுமை நீங்குமாறு கூறியருளினார். சிவசருமர் இறைவன் கட்டளைப்படி மருதவாணருடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று திருவெண்காடரிடம் மருதவாணரை அளித்துப் பொருள் பெற்றுத் திருவிடைமருதூர் மீண்டு வறுமை நீங்கி இன்புற்றார்.

30 Apr 2013

வரலாறு - பட்டினத்து அடிகள்


                காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் இவர் அவதரித்தார். பெற்றோர் திருவெண்காடர் எனப் பெயர் சூட்டி வளர்த்தனர். திருவெண்காடர் வளர்ந்து சிறந்து வாணிகத்தால் பெரும் பொருள் ஈட்டி சிவபத்தியில் சிறந்தவராய், சிவனடியார்களுக்கு வேண்டுவன அளிக்கும் பண்பினராய் விளங்கினார். நிறைந்த செல்வம் உடையவராய் வாழ்ந்து வந்த இவருக்கு மக்கட் செல்வம் வாய்த்திலது.

29 Apr 2013

பட்டினத்துப் பிள்ளையார் புராணம்

             தில்லையில் வாழ்ந்த இவர் மரபினராய வணிகர் சிலர் வேண்டுகோட்படி இப்புராணம் பிற்காலப்புலவர் ஒருவரால் எழுதப் பெற்றது. இப்புராணத்துட் கூறப்படும் வரலாறும், புலவர் புராணம் முதலியவற்றுட் கூறப்பெறும் வரலாறுகளுமே பெருவழக்கிலுள்ள பட்டினத்தார் வரலாறாக இன்று வழங்கி வருகின்றன.

இவ்வரலாறு களில் சில செய்திகள் புனைவாகக் கருதப்படுகின்றன.

28 Apr 2013

அடிகள் -பட்டினத்து அடிகள்


         காவிரிப்பூம்பட்டினத்தில் செல்வச் செழுங்குடியில் தோன்றி மனைத்தக்க மாண்புடைய மனைவியை மணந்து இல்லறம் இயற்றி வந்த இவர் பிறவி நோய்க்குக் காரணமான ஆசையை அறவே விட்டொழித்துத் துறவறம் பூண்டு உயர்ந்தவர்.

`பாரனைத்தும் பொய்யெனவே

பட்டினத்துப் பிள்ளையைப் போல்

ஆரும் துறக்கை அரிது` (தாயு. 516)

              எனத் தாயுமானவரால் போற்றப்பெறும் இவர்பெயர் துறவறநெறியில் நின்றார்க்கே சிறப்பாக உரிய அடிகள் என்ற சொல்லோடு இணைத்து வழங்கப்பெறும்.

27 Apr 2013

பட்டினத்து அடிகள்



சிவமயம்

              பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீரதேவர், கல்லாட தேவர், கபிலதேவர், பரணதேவர், இளம் பெருமான் அடிகள், அதிரா அடிகள், பட்டினத்து அடிகள் நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய பன்னிருவராவர்.


                இவர்களுள் திருவாலவாயுடையார் மதுரைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுள் ஆவார். ஏனையோருள் காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர் கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகிய மூவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் திருத்தொண்டத் தொகையில் போற்றப்பெற்ற நாயன்மார்கள் ஆவர். இவர்கள் வரலாறு பெரிய புராணத்தில் விரி வாகக் கூறப்பட்டுள்ளது.

                  சங்கப்புலவரும் சங்கப்புலவர் பெயர் தாங்கியவர்களுமாக நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர் ஆகிய நால்வர் உள்ளனர்.

                    ஏனையோராக இளம் பெருமான் அடிகள், அதிரா அடிகள், திருவெண்காட்டு அடிகள் எனப்படும் பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய நால்வர் விளங்குகின்றனர்.

26 Apr 2013

கருவூர்த் தேவர்

                   கருவூர்த்தேவர் கொங்குநாட்டில் உள்ள கருவூரில் பிறந்தவர். இவர் பிறந்த ஊரோடு இணைத்து இவரது திருப்பெயர் கருவூர்த் தேவர் என வழங்கப்படுகிறது. இவரது இயற்பெயர் இன்னதென்று அறியமுடியவில்லை. இவர் அந்தணர் குலத்தில் தோன்றியவர். வேதாகமக்கலைகள் பலவற்றையும் கற்றுத் தெளிந்தவர். மிகப்பெரிய யோகசித்தர். போக முனிவரிடம் உபதேசம் பெற்று ஞானநூல்கள் பல வற்றையும் ஆராய்ந்து சிவயோகமுதிர்வு பெற்று காயகல்பம் உண்டவர். சித்திகள் பலவும் கைவரப்பெற்றவர். உலக வாழ்வில் புளியம்பழமும் ஓடும்போல ஒட்டியும் ஒட்டாமலும் விளங்கியவர். இவர் செய்த அற்புதங்கள் பலவாகும். இவரது செயல்கள் இவரைப் பித்தர் என்று கருதும்படி செய்தன.

              கருவூர்த்தேவர் கொங்குநாடு, வடநாடு, தொண்டைநாடு, நடுநாடு முதலிய இடங்களில் உள்ள தலங்களைத் தரிசித்துக் கொண்டு, தென்பாண்டிநாட்டுத் திருப்புடைமருதூர் சென்று, இறைவனிடம் திருவடிதீட்சை பெற்றார். இவர் திருநெல்வேலியடைந்து நெல்லை யப்பர் சந்நிதியில் நின்று `நெல்லையப்பா` என்றழைக்க, அப்பொழுது பெருமான் இவரது பெருமையைப் பலரும் அறியும் பொருட்டு வாளா இருக்க ``இங்குக் கடவுள் இல்லைபோலும்`` என்று இவர் சினந்து கூற அவ்வாலயம் பாழாகியது என்றும், பின்னர் அவ்வூர் மக்கள் நெல்லையப்பரை வேண்ட அப்பெருமான் கருவூர்த்தேவரை நெல்லை யம்பதிக்கு அழைத்து வந்து காட்சியளிக்க, மீண்டும் அவ்வாலயம் செழித்தது என்றும் கூறுவர்.

                       கருவூர்த்தேவர் நெல்லையில் இருந்து திருக்குற்றாலம் சென்று அங்குச் சிலநாள் தங்கியிருந்து, பொதிய மலையை அடைந்து அகத்தியரைத் தரிசித்து அருள்பெற்றார்.

                  தஞ்சையில் முதலாம் இராஜராஜசோழன் (கி.பி. 985-1014) தனது இருபதாம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் கட்டத் தொடங்கிய இராசராசேச்சுரத்துப் பெருவுடையார்க்கு அஷ்டபந்தன மருந்து சார்த்தினன். அம்மருந்து பலமுறை சார்த்தியும் இறுகாமல் இளகிக் கொண்டிருந்தது. அது கண்ட அரசன் வருந்தி இருந்தனன். அதனை அறிந்த போகமுனிவர் பொதியமலையில் இருந்த கருவூர்த்தேவரைத் தஞ்சைக்கு வருமாறு அழைப்பித்தார். கருவூர்த் தேவரும் குரு ஆணைப்படி தஞ்சை வந்து, பெருமான் அருளால் அஷ்டபந்தன மருந்தை இறுகும்படி செய்தருளினார்.

            தஞ்சையினின்றும் திருவரங்கம் சென்று பின்னர்த் தம் கருவூரை வந்தடைந்தார். கருவூரில் உள்ள வைதிகப்பிராமணர் பலர் கருவூர்த் தேவரை வைதிக ஒழுக்கம் தவறியவர் என்றும், வாம பூசைக் காரர் என்றும் பழிச்சொல்சாற்றி தொல்லைகள் பல தந்தனர். கருவூர்த் தேவர் அவர்களுக்குப் பயந்தவர் போல நடித்து, ஆனிலை ஆலயத்தை அடைந்து, பெருமானைத் தழுவிக்கொண்டார் என்பது புராண வரலாறு.

              கருவூர்த் தேவரின் திருவுருவச்சிலை கருவூர்ப் பசுபதீசுவரர் கோயிலிலும், தஞ்சைப் பெரிய கோயிலிலும் விளங்குகிறது.

             இவர், கோயில், திருக்களந்தை ஆதித்தேச்சரம், திருக்கீழ்க் கோட்டூர் மணியம்பலம், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கை கொண்ட சோழேச்சரம், திருப்பூவணம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை, திருவிடைமருதூர் என்ற பத்து சிவத்தலங்கட்கு ஒவ்வொரு பதிகங்கள் வீதம் பத்துத் திருவிசைப்பாத் திருப்பதிகங்கள் பாடியுள்ளார்.

காலம்:

               இவர், தஞ்சை இராசராசேச்சரம், கங்கைகொண்ட சோழேச்சரம் ஆகிய இரண்டு தலங்களையும் பாடியிருத்தலின் இவர் கி.பி. 10 ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியிலும், 11ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர் எனலாம்.

24 Apr 2013

திருமந்திரச் சொல்லாட்சிகள்: திருமூலர்

வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் தெளிந் துணர்ந்த சிவஞானச் செல்வராகிய திருமூலர், தாம் சிவயோக நிலையி லிருந்து சிந்தித்துணர்ந்த சிவாகம உண்மைகளை இந்நாட்டவர் யாவரும் ஓதியுணர்ந்து உய்தல் வேண்டும் என்னும் அருள்நோக்குடன் திருமந்திரப் பனுவலை அருளிச் செய்தமையால், அவரருளிய பாடல்களில் சமய சாத்திரக் குறியீடுகளாகிய பதி, பசு, பாசம்; ஆணவம், கன்மம், மாயை; சித்து, அசித்து; சரியை, கிரியை, யோகம், ஞானம்; சத்து, அசத்து, சதசத்து; வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம்; நாதம், விந்து, சத்தி, சாத்துமான், வயிந்தவம்; சத்தாதி வாக்கு மனாதிகள், சாக்கிராதீதம், சுத்தம், துரியம் விஞ்ஞானர், பிரளயாகலத்து அஞ்ஞானர்; இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி; கவச நியாசங்கள் முத்திரை; பத்மாசனம், பத்திராசனம், சிங்காதனம்; பூரகம், கும்பகம், ரேசகம் என்பன முதலாகவுள்ள வடசொற்களும் சொற்றொடர்களும் அக்காலத்துப் பொது மக்களிடையே வழங்கிய வழக்குச் சொற்கள் சிலவும் இடம் பெற்றுள்ளன. தமிழ் வடமொழி என்னும் இருமொழிகளையும் கலந்து திருமூலர் தாமே படைத்து வழங்கிய அணுவன் (தி.10 பா.2501), மாயாள் (தி.10 பா.399), என்றாற்போலும் புதுச் சொற்களும் திருமந்திரத்தில் இடம் பெற்றுள்ளன. வேத ஆகமங்களின் முடிந்த முடிபாகிய சைவசமயத் தத்துவம் என்ற பொருளில் சித்தாந்தம் என்ற சொற்றொடரை முதன் முதல் வழங்கியவர் திருமூல நாயனா ரேயாவர். சுந்தரர் காலத்துப் பல்லவ மன்னனாகிய இரண்டாம் நரசிங்க வர்மன், தான் காஞ்சியில் அமைத்த கைலாசநாதர் கோயிலிற் பொறித்துள்ள வடமொழிக் கல்வெட்டில், சைவ சித்தாந்த மார்க்கத்தைப் பின் பற்றியவன் எனத் தன்னைக் குறித்திருப்பது இங்கு நோக்கத்தகுவதாகும்.

ஆரியம் தமிழ் என்னும் இருமொழிகளையும் உணர்ந்து இமயம் முதல் குமரிவரையுள்ள எல்லாத் தலங்களிலும் போக்கு வரவு புரிந்த தவமுனிவராகிய திருமூலர் அருளிய திருமந்திரப் பாடல்களில் சமய சாத்திரக் குறியீடுகளாகிய வட சொற்களும் சேரி வழக்குச் சொற்களும் விரவிக் காணப்படுதல் இயல்பே; திருமந்திரத்தின் மொழிக்கலப்பு ஒன்றே பற்றித் திருமூலர் காலத்தின் தொன்மை யினைக் குறித்து ஐயுறுதற்குச் சிறிதும் இடமில்லை.

பிற சமயத்தைப் பற்றிய குறிப்புக்கள் திருமூலர், தம் நூலில் ஆறுசமயங்கள் எனவும் அவற்றிற் பல வாகிய நூறு சமயங்கள் எனவும் இந்நாட்டில் வழங்கும் சமயங்களைக் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் வேத வழக்கொடு மாறுபட்ட புறச் சமயங்களாகிய புத்த, சமண மதங்களைப் பற்றிய குறிப்பெதுவும் புறச் சமய தூடணம் பற்றிய திருமந்திரப் பாடல்களில் இடம் பெறவில்லை. இதனைக் கூர்ந்து நோக்குங்கால், புத்த சமண மதங்கள் தமிழ் நாட்டிற் புகுந்து யாண்டும் பரவித் தமிழ் மக்களது வாழ்க்கையில் வேரூன்றி நிலைபெறுதற்கு முன்னரேயே சிவயோகியராகிய திருமூலர், சிவாகமப் பொருள் குறித்த இத்திருமந்திரப் பனுவலை இயற்றி யருளினார் என்பது இனிது விளங்கும்.

23 Apr 2013

தொல்காப்பிய உரைக் குறிப்பு:


                தொல்காப்பியம் புறத்திணையியல் 20 - ஆம் சூத்திர உரையில், ``யோகிகளாய் உபாயங்களான் முக்காலமும் உணர்ந்த மாமூலர் முதலியோர் அறிவன் தேய்த்து அனைநிலை வகையோர் ஆவர். அவர்க்கு மாணாக்கராகத் தவஞ் செய்வோர் தாபதப் பக்கத் தராவர்`` என நச்சினார்க்கினியர் கூறும் விளக்கம் பெருமை வாய்ந்த சிவயோகியராகிய திருமூல நாயனாரையும் அவர்தம் மாணாக்கர் களையும் குறித்தமைந்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கியுணரத் தகுவதாகும்.

21 Apr 2013

ஐந்து தமிழ் மண்டலம்: திருமூலர்

        இவ்வாறு தமிழுடன் திசைமொழிகள் பதினேழினையும் சேர்த்துப் பதினெண்மொழிகள் என வழங்கும் வழக்கம் சங்க நூல்களிற் காணப்படவில்லை. தொல்காப்பியர் காலத்தில் `வண்புகழ் மூவர் தண் பொழில் வரைப்பு` எனவும் சங்க காலத்தில் குணபுலம், குடபுலம், தென்புலம் எனவும் தமிழ்நாடு மூன்று மண்டலங்களாகப் பகுக்கப் பெற்றிருந்தது.

          சங்க காலத்திற்குப் பின் தமிழ்நாடு சேர மண்டலம், பாண்டி மண்டலம், கொங்கு மண்டலம், சோழ மண்டலம், தொண்டை மண்டலம் என ஐந்து மண்டலங்களாகப் பகுக்கப்பெற்றது. இப்பகுப்பினை, ``தமிழ் மண்டலம் ஐந்துந் தாவிய ஞானம்`` (தி.10 பா.1646) என வரும் திருமந்திரத்தில் திருமூலர் குறித்துள்ளார்.

        தமிழ் நாடு மேற்குறித்த ஐந்து மண்டலங்களாகப் பிரிந்து தனித் தனியாட்சியில் நிலைபெற்ற காலம் கடைச் சங்க காலத்திற்குப்பின் கி.பி. மூன்றாம் நூற்றாண்டினை யொட்டியதாகும்.

           தில்லையிற் கூத்தப் பெருமான் அருட்கூத்தியற்றும் திருவம்பலத்திற்குப் பொன்வேய்ந்து அதனைப் பொன்னம்பலமாகத் திருப்பணி செய்தவன்; கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவ மன்னனாகிய சிம்மவர்மன் என்பர் வரலாற்றாராய்ச்சியாளர்.

         எனவே அவ் வேந்தனாற் பொன் வேயப்பெற்ற திருச்சிற்றம்பலத்தைப் பொன்னம்பலம் என்ற பெயரால் போற்றிய திருமூல நாயனார் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியிலோ அன்றி ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலோ திருமந்திர மாலையை நிறைவு செய்திருத்தல் வேண்டும் எனக் கருதுதல் வரலாற்றாராய்ச்சிக்கு ஏற்புடையதாகும்.

           திருமூல நாயனார் இந்நிலவுலகில் மூவாயிரம் ஆண்டு சிவயோகத்து அமர்ந்திருந்து தமிழ் மூவாயிரமாகிய திருமந்திர மாலையைப் பாடியருளினார் எனச் சேக்கிழார் நாயனார் கூறுதலால் திருமூலர் திருவாவடுதுறையிற் சிவபோதியாகிய அரசின் கீழ்ச் சிவ யோகத்தமர்ந்த காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பன்னூ றாண்டுகள் முற்பட்டதாகும். எண்ணிலிகாலம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த அத்தவமுனிவர் கடைச்சங்கம் நிலவிய காலப் பகுதியிலும் அதற்குப் பின்னரும் தமிழ் நாட்டில் சிவயோக நிலையில் இருந்திருத்தல் வேண்டும் எனக் கொள்ள வேண்டியுளது.

பதினெண் மொழிகள்:


திருமூலர் திருமந்திரத்தை அருளிச்செய்த காலத்து இந் நாட்டின் தாய்மொழியாகிய தமிழும், தமிழ் நாட்டைச் சூழவுள்ள புறநாடுகளின் தாய்மொழிகளாகிய பதினேழு மொழிகளும் ஆகப் பதினெட்டு மொழிகள் சிறந்து விளங்கின. இப்பதினெண் மொழிகளில் வெளிவந்த மெய்ந்நூற் பொருள்களை உணர்ந்து கொள்வதில் அக் காலச் சான்றோர் பலரும் ஆர்வமுடன் ஈடுபட்டார்கள். இம்மொழிகள் யாவும் உலகமக்கள் நலன்கருதி அறமுதற் பொருள்களையுணர்ந்து கொள்ளுதற்குரிய சாதனமாக இறைவனாற் படைத்தளிக்கப்பெற்றன. இப்பதினெண் மொழிகளிற் கூறப்படும் அறமுதற் பொருள்களை உணர்ந்தவர்களே பண்டிதர் எனச் சிறப்பாக மதித்துப் பாராட்டப் பெற்றனர் என்பது, 


பண்டித ராவார் பதினெட்டுப் பாடையுங் 

கண்டவர் கூறுங் கருத்தறிவா ரென்க 

பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும் 

அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே. -தி.10 பா.111

எனவரும் திருமந்திரத்தால் இனிது விளங்கும். 

20 Apr 2013

திருமந்திரம் அருளிய காலம்:

 
             இனி, திருமூல நாயனார் இத் திருமந்திரப் பனுவலை அருளிச் செய்த காலம் எது என்பது இங்கு ஆராய்தற்குரியதாகும்.

           கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் `நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்` (தி.7 ப.35. பா.5) எனப் போற்றியிருத்தலாலும், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய தேவார ஆசிரியர் பாடியருளிய திருப்பதிகங்களில், திருமூலர் அருளிய திருமந்திரப் பாடல்களின் சொற்றொடர்களும் பொருள் களும் எடுத்தாளப்பட்டிருத்தலாலும், திருமூல நாயனார் காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதென்பது தெளிவு. திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத்தமர்ந்து ஆண்டுக் கொரு திருப்பாடலாக மூவாயிரந் திருப்பாடல்களை அருளிச் செய்தார் எனப் பெரிய புராணம் கூறும். சேக்கிழாரடிகள் கூறுமாறு திருமூலர் இந்நிலவுலகில் நெடுங்காலம் சிவ யோகத்தில் அமர்ந்திருந்தார் என்பது,

``ஒப்பில் எழு கோடி யுகமிருந்தேனே` -தி.10 பா.13
எனவும்
``இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி`` -தி.10 பா.19
     எனவும் வரும் திருமூலர் வாய்மொழிகளால் நன்கு துணியப்படும். திருமூலரால் `இக்காயம்` எனச் சுட்டப் பட்டது. மூலனுடைய உடம்பெனக் கொள்ளுதல் பொருந்தும்

18 Apr 2013

தமிழ் முனிவர்: திருமூலர்

தமிழ் முனிவராகிய அகத்தியரைக் காண விரும்பித் திருக் கயிலாயத்தினின்றும் தென்றிசை நோக்கிவந்த சிவயோகியார், வட நாட்டிற் சிவத்தலங்கள் பலவற்றையும் வழிபட்டு வருபவர், தென் னாட்டிற் காஞ்சி நகரத்தையடைந்து அங்கு வாழும் சிவயோகியர் பலரொடும் அளவளாவினார் எனச் சேக்கிழாரடிகள் குறித்தலாலும், தமிழ் நாட்டிற் பொதிய மலையில் தங்கிய அகத்திய முனிவரொடு பழகிய நட்பினால் அவரைக் காணப் புறப்பட்டு வந்தமையாலும், தமிழகத்தின் தெற்கெல்லையாகிய குமரித்துறையில் அருட்சத்தியாகிய அம்மையார் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருத்தலையும், தம் காலத்தில் தமிழ்நாடு ஐந்து மண்டலங்களாகப் பகுக்கப்பட்டிருத் தலையும், வழிப்போவார் அச்சமின்றிச் செல்லவொண்ணாதபடி கொங்கு நாட்டில் வழிப்பறித் தொழில் நிகழ்தலையும் இந்நூலிற் குறித்துள்ளமையாலும் இந்நூலாசிரியராகிய சிவயோகியார் மூல னுடம்பிற் புகுந்து திருமூலர் என்னும் பெயரைப் பெறுவதற்கு முன்னரும் தமிழ் நாட்டிற் பல்லாண்டுகள் வாழ்ந்த பயிற்சியுடையார் என்பது நன்கு தெளியப்படும். சிவாகமப் பொருளை நன்றாகத் தமிழிற் செய்யும்படி இறைவன் தம்மை நன்றாகப் படைத்தனன் எனத் தம்மைத் தமிழொடு தொடர்பு படுத்திக் கூறுதலால் அவர் தமிழ்க்குலத் தொடர் புடையவர் என்பதும், எனவே தென்தமிழ் நாட்டிலிருந்து வட கயிலையை அடைந்து மீண்டு தென்னாடுபோந்து திருவாவடு துறையிற் சிவயோகத் தமர்ந்து செந்தமிழாகமத்தை அருளிச்செய்து சிவபரம்பொருளுடன் இரண்டறக் கலந்த தமிழ்முனிவர் திருமூல நாயனாரென்பதும் நன்கு துணியப்படும்.

17 Apr 2013

திருமூலர் பெருமை:

மூலனுடம்பிற் புக்குத் திருமூலராய் எழுந்த சிவயோகியார், இறைவனருளால் சதாசிவமூர்த்தியை ஒத்துச் சிவாகமப் பொருளை அறிவுறுத்தும் முற்றுணர்வும் தேவர்க்கெல்லாம் முதன்மையும் உடையவராகத் தாம் விளங்கிய திறத்தினை,


நந்தி யருளாலே மூலனை நாடிப்பின்


நந்தி யருளாலே சதாசிவ னாயினேன்


நந்தி யருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்


நந்தி யருளாலே நானிருந் தேனே. -தி.10 பா.29


என வரும் திருப்பாடலிற் குறித்துள்ளார்.

16 Apr 2013

தேவர்க்கெல்லாம் முதன்மை:திருமூலர்

           திருமூலரால் ஆதரிக்கப்பெற்று அவர் அருளிய திருமந்திரப் பனுவற்பொருளை அவர்பாற் கேட்டுணர்ந்த மாணாக்கர்கள் மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமலையன் என்னும் பெயரினராகிய எழுவர் எனத் தெரிகிறது. இச்செய்தி,

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என்வழி யாமே. -தி.10 பா.8
எனவரும் திருமந்திரத்தால் அறியப்படும்.

திருமூலர் மரபு:

            இவ்வாறு நெடுங்காலம் இந்நிலவுலகில் தங்கியிருந்ததன் காரணம், இறைவனுடன் பிறப்பின்றி விளங்கும் அருட் சத்தியாகிய புவனபதியென்னும் அருந்தவச் செல்வியை வழிபட்டு அவ் வன்னையின் அருளால் இவ்வுலகிற் பத்திநெறியையும் யோக நெறியையும் ஞான நெறியையும் நிலைபெறச் செய்து இறைவனது அருட்கூத்தினை விளக்கும் தமிழ் வேதமாகிய திருமந்திரப் பனுவலை அருளிச் செய்தற்பொருட்டே என்பதனைத் தம் மாணாக்கர்களாகிய இந்திரன், மாலாங்கன் ஆகியவர்களை நோக்கி அறிவுறுத்தும் முறையில் அமைந்தன,

இருந்தவக் காரணங் கேளிந் திரனே
பொருந்திய செல்வப் புவனாபதியாம்
அருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன்
பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே. -தி.10 பா.14 எனவும்,
மாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம்
நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே. -தி.10 பா.16
எனவும் வரும் திருமந்திரத் திருப்பாடல்களாகும்.

13 Apr 2013

திருக்கூத்துத் தரிசனம்: திருமூலர்

                            திருமூலர் தம்முடன் இருந்து நந்தி தேவர் பால் உபதேசம் பெற்றவர்களாகச் (சனகர், சனந்தனர், சனாதனர், சனற் குமாரர் என்னும்) நந்திகள் நால்வரையும், சிவயோகமாமுனி, தில்லையில் திருக்கூத்துத் தரிசனம் கண்ட பதஞ்சலி முனிவர், வியாக்கிர பாத முனிவர் ஆகியவர்களையும் சேர்த்து எண்மராகக் குறித்துள்ளார் (தி.10 பா.6). இதனை நோக்குங்கால் இவர் சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்கிர பாதர் ஆகிய முனிவர்கள் காலத்தில் உடன் வாழ்ந்த சிவாகமச் செல்வர் என்பது உய்த்துணரப்படும். திருமூலர் தில்லையில் திருக்கூத்துத் தரிசனங்கண்டு இவ்வுலகில் நெடுங்காலம் இருந்தவர். இச்செய்தி,

செப்புஞ் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றும்
தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பில் எழுகோடி யுகமிருந் தேனே. -தி.10 பா.13
எனத் திருமூலரே தமது வரலாற்றைக் குறிப்பிடுதலால் இனிது விளங்கும்.

11 Apr 2013

திருமந்திரமாலை என்னும் பெயர்: திருமூலர்

             சிவபெருமான் திருவடிகளைச் சென்னியிற் கொண்டு அம்முதல்வன் அருளிய சிவாகமப் பொருளை விரித்துரைக்க எண்ணிய திருமூலநாயனார் சிவனருளைச் சிந்தித்திருந்து தமிழ் மூவாயிரமாகிய மந்திரப்பனுவலை அருளிச் செய்தார் என்பதும், இவ்வருள் நூலுக்குத் திருமூலர் இட்ட பெயர் திருமந்திர மாலை என்பதும்,

நந்தி யிணையடி நான் தலை மேற்கொண்டு
புந்தியி னுள்ளே புகப்பெய்து போற்றி செய்
அந்தி மதிபுனை அரனடி நாள்தோறும்
சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே. -தி.10 பா.12
எனவும்,
பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடுங் கூடிநின் றோதலு மாமே. -தி.10 பா.25
எனவும் வரும் திருமூலர் வாய்மொழிகளால் நன்கு புலனாம்.

10 Apr 2013

ஆவடுதுறையில் அருள்யோகம்: திருமூலர்

            மூலனுடம்பிற் புக்க சிவயோகியார், திருவாவடுதுறைத் திருக்கோயிலை வழிபட்டு அங்குள்ள சிவபோதியாகிய அரசமரத்தின் நீழலில் எண்ணில்லாத பல்லாண்டுகள் இறைவனை ஞானத்தால்

தொழுது சிவயோகத்தில் அமர்ந்திருந்தார் என்பது,
சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்

சேர்ந்திருந் தேன்சிவ னாவடு தண்டுறை

சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலிற்

சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே. -தி.10 பா.18

எனவும்,

இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி

இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே

இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே

இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே. -தி.10 பா.19

எனவும்,

ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு

ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள்

ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து

நானு மிருந்தேன்நற் போதியின் கீழே. -தி.10 பா.21

            எனவும் வரும் திருமூலர் வாய்மொழிகளால் இனிது புலனாம். இத்திருப்பாடலில் `நந்திநகர்` என்றது திருவாவடு துறையினை.

9 Apr 2013

திருவருட் செயல்: திருமூலர்

             இவ்வாறு இறைவன் தமது பழைய உடம்பினை மறைத்து மூலன் என்னும் ஆயனுடம்பிற் புகச்செய்தருளிய இப்படைப்புத் தொழில், அம்முதல்வனது பொருள்சேர் புகழ்த்திறங்களைத் தமிழ்ப் பாக்களால் நன்றாகப் புனைந்து போற்றுதற்கேற்ற நலந்தரும் வாழ் வினை நல்கியதென வுணர்ந்த சிவயோகியார், பரகாயப் பிரவேசம் என்னும் சித்தித் திறத்தால் தாம் புகுந்திருந்த மூலனுடம்பினை ``எனது முன்னைத் தவத்தின் பயனாக எனக்கு இறைவனால் நன்றாகத் திருத்தமுறச் செய்தளிக்கப்பட்ட நல்ல படைப்பு இதுவாகும்`` எனக் கொண்டு போற்றி மகிழ்ந்தனர் என்பது,

பின்னை நின்றென்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவஞ் செய்திலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே. -தி.10 பா.20
எனவரும் அவரது வாய்மொழியால் இனிது விளங்கும்.

சிவயோக சித்தர்:திருமூலர்

சிவயோகியார் திருமூலராவதற்கு முன் அட்டமாசித்திகளும் கைவரப்பெற்றவர் என்பதும், பசுக்களின் துயரத்தினை நீக்கும் பொருட்டே இறைவன் அருளின்வழி தம் உடம்பினை ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டு மூலன் என்னும் ஆயனது உடம்பிற் புகுந்து பசுக்களைச் சாத்தனூரிற் செலுத்தி மீண்டுவந்து தம் பழையவுடம் பினைத் தேடிப் பார்த்து இறைவனருளால் அவ்வுடம்பு மறைந்தொழிய அதனைக் காணாதவராய், தமது முன்னைய உடம்பினாற் பயனில்லை யெனவுணர்ந்து இறைவன் திருக்குறிப்பின் வண்ணம் மூலன் உடம்பிலேயே நெடுங்காலம் விரும்பித் தங்கியிருந்தனர் என்பதும்,


``அரிய தெனக்கில்லை அட்டமாசித்தி
பெரிதருள் செய்து பிறப்பறுத்தானே`` -தி.10 பா.626
எனவும்
நந்தியருளாலே நாதனாம் பேர்பெற்றோம்
நந்தியருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருளாஅது என்செயும் நாட்டினில்
நந்திவழிகாட்ட நானிருந் தேனே. -தி.10 பா.7
எனவரும் திருமூலர் வாய்மொழிகளால் நன்கு விளங்கும். மேற்குறித்த திருமந்திரம் 7ஆம் பாடலில் `நந்தி அருளா அது` எனத் திருமூலர் சுட்டியது, இறைவனால் மறைக்கப்பட்ட தமது பழைய உடம்பினை. நந்தியால் அருளப்படாத அப்பழைய உடம்பு நாட்டிலுள்ளோர்க்கு என்ன பயனைத் தரவல்லது? ஒரு பயனையுந் தாராது என அதனை, வெறுத்து விடும் நிலையில் `நந்தி அருளா அது என்செயும் நாட்டினில்` (தி.10 பா.7) என வினவிய குறிப்பு ஆழ்ந்துணரத் தகுவதாகும்.

7 Apr 2013

திருமந்திரத்தில் அகச்சான்று - நந்திதேவர் அருள்:திருமூலர்


திருமூலராகிய சிவயோகியார் திருக்கயிலையில் நந்திதேவர் பால் ஞான நூற் பொருள்களை ஓதியுணர்ந்த நான்மறை யோகிகளுள் ஒருவர் என்பது,

நந்தி யருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரர்
என்றிவர் என்னோ டெண்மரு மாமே. -தி.10 பா.6 எனவரும் திருமூலர் வாய்மொழியால் நன்கு தெளியப்படும்.

6 Apr 2013

திருமூலரது முன்னை நிலை: திருமூலர்

                  இங்ஙனம் திருமூல நாயனார் வரலாறாகச் சேக்கிழார் நாயனார் விரித்துரைத்த நிகழ்ச்சிகள் பலவற்றுக்குத் திருமந்திரத்தில் திருமூலர் தம் வரலாறு கூறும் முறையில் அருளிச் செய்த திருமந்திரப் பாடல்கள் அகச்சான்றுகளாக அமைந்துள்ளன. மூலன் என்னும் ஆயனது உடம்பிற் புகுந்து திருமந்திர மாலையை அருளிச் செய்த முனிவர்பிரான் திருக்கயிலையில் நந்தி தேவர்பால் ஞானோபதேசம் பெற்ற நான்மறையோகிகளுள் ஒருவர் எனவும் அருளாளராகிய அவர் சாத்தனூரை அடைந்த பொழுது மூலனால் மேய்க்கப்பெற்ற பசுக்களின் துயரம் நீங்கத் தமது சித்தித் திறத்தால் தமது உயிரை மூலனது உடம்பிலே புகச் செய்து, திருமூலர் என்னும் பெயர் பெற்றுத் திருமந்திர மாகிய செந்தமிழ் ஆகமத்தை அருளிச் செய்தார் எனவும் நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழா ரடிகளும் தெளிவாகக் கூறியிருத்தலால், திருமந்திர நூலாசிரியர்க்கு வழங்கும் திருமூலர் என்னும் இப்பெயர் அவர் மூலன் என்னும் ஆயனது உடம்பிற் புகுந்த பின்னரே உளதாயிற்று என்பது நன்கு புலனாகும். நந்தி தேவர் பால் அருளுபதேசம் பெற்ற நான்மறை யோகியராகிய அவர், தம்முன்னை நிலையில் அவர் பிறந்த ஊர், குடி, பேர் முதலியவற்றை அறிந்து கொள்ளுதற்குரிய வரலாற்றுச் சான்றுகள் தெளிவாகக் கிடைக்காமையால், அவரது வரலாறு கூற வந்த சேக்கிழாரடிகள், சிவயோகியார் மூலனுடம்பிற் புகுந்து திருமூலர் என்னும் பெயர் பெறுவதற்கு முன்னுள்ள அவர்தம் ஊர், பேர், குலம், முதலிய வரலாற்றுச் செய்திகளைக் குறித்து எதுவும் கூறாது விட்டார் எனக் கருதவேண்டியுள்ளது.

4 Apr 2013

திருவாவடுதுறையில் சிவயோகம்: திருமூலர்

                 சாத்தனூர்ப் பொதுமடத்தில் சிவயோகத்தில் அமர்ந்திருந்த திருமூலர். யோகுகலைந்து எழுந்து முதல்நாளில் பசுக்கள் வந்த வழியினையே நோக்கிச் சென்று தமது உடம்பினை மறைத்து வைத்த இடத்தை அடைந்து தம் உடம்பைத் தேடிப்பார்த்தார். வைத்த இடத்தில் அவ்வுடம்பு காணப்படவில்லை. அது மறைந்து போன செயலை மெய்யுணர்வுடைய சிந்தையில் ஆராய்ந்து தெளிந்தார்.

`              சிவபெருமான் உயிர்கள் பால்வைத்த பெருங்கருணை யினாலே அருளிச் செய்த சிவாகமங்களின் அரும்பொருள்களை இந் நிலவுலகில் திருமூலரது வாக்கினால் தமிழிலே வகுத்துரைக்கக் கருதிய திருவருட்டிறத்தால் சிவயோகியாரது முன்னைய உடம்பினை இறைவர் மறைப்பித்தருளினார்` என்ற உண்மையினைத் திருமூலர் தமது முற்றுணர்வினால் தெளிய வுணர்ந்தார். சாத்தனூரிலிருந்து தம்மைப் பின்தொடர்ந்து வந்த ஆயர் குலத்தவர்க்கும் தமக்கும் எத்தகைய உறவும் இல்லை என்று அவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்தார், அவர்களெல்லோரும் தம்மை விட்டு நீங்கியபின் சிவபெருமான் திருவடிகளைச் சிந்தித்து அவ்விடத்தை விட்டு நீங்கித் திருவாவடுதுறைத் திருக்கோயிலை அடைந்தார்; அங்கு எழுந்தருளிய அம்மையப்பரை வணங்கி அத் திருக்கோயிலின் மேற்றிசையிலுள்ள அரசமரத்தின் கீழ்த் தேவாசனத்தில் சிவயோகத்தில் அமர்ந்து, நெஞ்சத் தாமரையில் வீற்றிருந்தருளும் செம்பொருளாம் சிவபரம் பொருளுடன் உணர்வினால் ஒன்றியிருந்தார்.

                    திருமந்திரம் அருளிச் செய்தல் இங்ஙனம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூல நாயனார். ஊனொடு தொடர்ந்த பிறவியாகிய தீய நஞ்சினாலுளவாம் துயரம் நீங்கி உலகத்தார் உய்யும் பொருட்டு ஞானம் யோகம் சரியை கிரியை என்னும் நால்வகை நன்னெறிகளும் நால்வகை மலர்களாக விரிந்து ஞானமணம் பரப்பிச் சிவானந்தத் தேன் பிலிற்றும் திருமந்திர மாலையாகிய செந்தமிழ்ப் பனுவலை இறைவன் திருவடிக்கு அணிந்து போற்றும் நிலையில்,


ஒன்றவன் தானே, இரண்டவன் இன்னருள்,


நின்றனன் மூன்றினுள், நான்குணர்ந்தான், ஐந்து


வென்றனன், ஆறு விரிந்தனன், ஏழும்பர்ச்


சென்றனன், தானிருந் தானுணர்ந் தெட்டே.-தி.10 பாயி. பா.2


                  என்னும் திருப்பாடலைத் தொடங்கி, ஒராண்டுக்கு ஒரு திருப்பாடலாக மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத் தமர்ந்திருந்து மூவாயிரம் திருப் பாடல்களைத் திருவாய் மலர்ந்தருளினார். இவ்வாறு தமிழ் மூவாயிரமாகிய திருமந்திர மாலையை நிறைவு செய்தருளிய திருமூல நாயனார் சிவபெருமானது திரு வருளாலே திருக்கயிலையை யடைந்து இறைவன் திருவடி நீழலில் என்றும் பிரியாதுறையும் பேரின்ப வாழ்வினைப் பெற்று இனி திருந்தார். திருமூலர் அருளிய திருமந்திர மாலை `நலஞ் சிறந்த ஞான யோகக் கிரியா சரியையெலாம் மலர்ந்த மொழிமாலையாகத் திகழ் கின்றது` எனச் சேக்கிழார் பெருமான் திருமூலநாயனார் வரலாற் றினைப் பெரிய புராணத்தில் விரித்துக் கூறியுள்ளார்.

3 Apr 2013

ஊரவர் உண்மை உணர்தல்:திருமூலர்

                  அந்நிலையில் கதிரவன் மேற்குத் திசையை யணுக, மாலைப் பொழுது வந்தது. பசுக்கள் தத்தம் கன்றுகளை நினைந்து தாமே மெல்ல நடந்து சாத்தனூரை அடைந்தன. அவை செல்லும் வழியிலே தொடர்ந்து பின் சென்ற திருமூலர், பசுக்கள் தத்தமக்குரிய வீடுகளிற் சென்று சேர்ந்த பின்னர் அவ்வூர் வழியில் தனித்து நின்றார். அப்பொழுது ஆயனாகிய மூலனுடைய மனைவி ``என் கணவர் பொழுது சென்றும் வரவில்லையே, அவர்க்கு என்ன நேர்ந்ததோ`` என்று அஞ்சியவளாய்த் தன் கணவனைத் தேடிக் கொண்டு வழியெதிரே செல்பவள் திருமூலராகிய சிவயோகியார் நின்ற இடத்தை அடைந்தாள். தன் கணவனது உடம்பிற்றோன்றிய உணர்வு மாற்றத்தைக் கண்டாள். `இவர்க்கு ஏதோ தீங்கு நேர்ந்திருத்தல் வேண்டும்` என எண்ணினாள்; அவரைத் தளர்ச்சியின்றித் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் கருத்துடன் அவருடம்பைத் தொடு தற்கு நெருங்கினாள். அதுகண்ட திருமூலராகிய சிவயோகியார் அவர் தம்மைத் தீண்டாதபடி தடுத்து நிறுத்தினார். நெருங்கிய சுற்றத்தார் எவருமின்றித் தனியளாகிய அவள் திருமூலரது தொடர்பற்ற தனி நிலையைக் கண்டு அஞ்சிக் கலக்கமுற்றாள். ``நும்பால் அன்புடைய மனைவியாகிய எளியேனை வெறுத்து நீங்குதலாகிய இதனால் எனக்குப் பெருந்துன்பத்தைச் செய்துவிட்டீர்`` என்று புலம்பி வாட்ட முற்றாள். நிறைதவச் செல்வராகிய திருமூலர் அவளைப்பார்த்து, ``நீ எண்ணியபடி உனக்கு என்னுடன் எத்தகைய உறவும் இல்லை` என்று சொல்லிவிட்டு அவ்வூரிலுள்ள பொது மடத்திற் புகுந்து சிவ யோகத்தில் அமர்ந்திருந்தார்.

                   தன் கணவனது தன்மை வேறுபட்டதனைக் கண்ணுற்ற மூலன் மனைவி, அது பற்றி யாரிடமும் சொல்லாமலும் தவநிலையினராகிய அவர்பால் அணையாமலும் அன்றிரவு முழுதும் உறங்காதவளாய்த் துயருற்றாள். பொழுது விடிந்தபின் அவ்வூரிலுள்ள நல்லோரை யடைந்து தன் கணவனது நிலைமையை எடுத்துரைத்தாள். அதனைக் கேட்ட பெரியோர்கள் திருமூலரை அணுகி அவரது நிலையை நாடி உற்று நோக்கினார்கள். `இது பித்தினால் விளைந்த மயக்கம் அன்று; சித்த விகாரக் கலக்கங்களை யெல்லாம் அறவே களைந்து தெளிவுபெற்ற நிலையில் சிவயோகத்தில் அழுந்திய கருத்தினராய் இவர் அமர்ந்திருக்கின்றார். இந்நிலைமை யாவராலும் அளந்தறிதற்கு அரியதாகும்` எனத் தெளிந்தார்கள். `இவர் இருவகைப் பற்றுக்களையும் அறுத்து ஞானோபதேசத்தால் பரமர் திருவடியைப் பெற்ற சீவன் முத்தர்களைப் போன்று எல்லாவற்றையும் ஓருங்கே அறியவல்ல முற்றுணர்வுடைய முனிவராக விளங்குகின்றார். எனவே முன்னை நிலைமைப்படி உங்கள் சுற்றத் தொடர்பாகிய குடும்ப வாழ்க்கையில் ஈடுபடமாட்டார்` என மூலனுடைய மனைவிக்கு எடுத்துரைத்தார்கள். அதுகேட்டு அவள் அளவிலாத் துயரத்தால் மயக்கமுற்றாள். அருகேயுள்ளவர்கள் அவளுக்குத் தேறுதல்கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

2 Apr 2013

திருமூலராதல்:

                  ஆக்களின் பெருந்துயரத்தைச் சிவயோகியார் கண்டார். அருளாளராகிய அவருள்ளத்திலே `பசுக்கள் உற்ற துயரத்தை நீக்குதல் வேண்டும்` என்னும் எண்ணம் இறைவன் திருவருளால் தோன்றியது, `இந்த ஆயன் உயிர் பெற்றெழுந்தாலன்றி இப்பசுக்கள் துயரம் நீங்கா`` எனத் தெளிந்த சிவயோகியார், தம்முடைய உடம்பினைப் பாதுகாப்புடைய ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டுத் தாம் பயின்றுணர்ந்த பரகாயப் பிரவேசம் (கூடுவிட்டுக் கூடுபாய்தல்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை ஆயனாகிய மூலனது உடம்பிற் புகும்படி செலுத்தித் திருமூலர் என்னும் பெயருடையராய் எழுந்தார். அவர் ஆயனுடம்புடன் எழுதலும், சுற்றி நின்ற பசுக்கள் யாவும் தம் துயரம் நீங்கி அன்பின் மிகுதியால் அவரது உடம்பினை நாத்தழும்ப நக்கிமோந்து கனைத்து மிகுந்த களிப்புடன் துள்ளியோடித் தாம் விரும்பிய இடங்களிற் சென்று புல்லை மேய்ந்தன. அதுகண்டு மகிழ்ந்த திருமூலர் பசுக்கள் விரும்பிப் புல்மேயும் இடங்களில் உடன் சென்று நன்றாக மேய்த்தருளினார். வயிறார மேய்ந்த பசுக்கள் கூட்டமாகச் சென்று காவிரியாற்றின் துறையில் இறங்கி நல்நீர் பருகிக் கரையேறின. திருமூலர் அப்பசுக்களைக் குளிர்ந்த நிழலிலே தங்கி இளைப்பாறச் செய்து பாதுகாத்தருளினார்.

1 Apr 2013

சாத்தனூரில்:திருமூலர்

                        தில்லைத் திருநடங்கண்டு மகிழ்ந்த சிவயோகியார், அங்கிருந்து புறப்பட்டுக் காவிரியில் நீராடி அதன் தென்கரையினை அடைந்தார். உமையம்மையார் பசுவின் கன்றாக இருந்து இறைவனை வழிபாடு செய்து அம்முதல்வனுடன் எழுந்தருளியிருந்து மன்னுயிர்க்கு அருள் புரியுந் திருத்தலமாகிய திருவாவடுதுறையை அணுகித் திருக்கோயிலை வலம் வந்து வழித்துணை மருந்தாகிய மாசிலா மணியீசரை வழிபட்டு மகிழ்ந்தார். அந்நிலையிலே அத் தலத்தை விட்டு நீங்காததொரு கருத்து அவருள்ளத்தே தோன்றியது. அதனால் அத்தலத்திலே தங்கியிருந்தார். ஆவடுதுறையீசர்பால் ஆராத காதலையுடைய சிவயோகியார், அத்தலத்தை அரிதின் நீங்கிச் செல்லத் தொடங்கினார். அவர் செல்லும் வழியிற் காவிரிக் கரையிலுள்ள சோலையிலே மேய்ந்துகொண்டிருந்த பசுக்கள் கதறி யழுவதனை எதிரே கண்டார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே ஆநிரை மேய்க்குங் குடியிற் பிறந்த ஆயனாகிய மூலன் என்பான் அவ் விடத்தே தனியே வந்து பசு நிரையை மேய்க்குந் தொழிலில் ஈடு பட்டவன், தான் எடுத்த பிறவிக்குக் காரணமாகிய வினைகள் நுகர்ந்து தீர்ந்தமையால் அவனது வாழ்நாளைக் கூற்றுவன் கவர்ந்துகொள்ள உயிர்நீங்க அங்கு நிலத்தில் வீழ்ந்து இறந்து வெற்றுடலாய்க் கிடந்தான். அவனது உயிர்பிரியவே அவனால் அன்புடன் மேய்க்கப்பெற்ற பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றி நெருங்கிநின்று மோப்பனவும் கதறுவனவுமாகி வருந்தின.

தென்னாடு வருகை:திருமூலர்

                        திருக்கயிலாயத்திலே சிவபிரானது திருக்கோயிலில் முதற் பெருங் காவல் பூண்டவர் திருநந்திதேவர். அவரது திருவருள் பெற்ற மாணாக்கராகிய சிவயோகியார் ஒருவர். அவர் அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் வாய்க்கப் பெற்றவர்; அகத்திய முனிவர்க்கு நண்பர். அம் முனிவருடன் சில நாள் தங்குதற்கு எண்ணிய சிவ யோகியார், பொதியமலையை அடைதற்கு எண்ணித் திருக்கயிலாயத் தினின்றும் புறப்பட்டுத் தென்திசை நோக்கி வந்தார். வரும் வழியில் திருக்கேதாரம், பசுபதிநாதம் (நேபாளம்), அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத் தலங்களைப் பணிந்து காஞ்சி நகரையடைந்தார். அங்குத் திருவேகம் பத்தில் எழுந்தருளிய பெருமானை இறைஞ்சிப் போற்றினார். கல்வியிற் கரையிலாத காஞ்சி நகரில் வாழும் சிவயோகியர்களாகிய தவமுனிவர் பலருடனும் அளவளாவி மகிழ்ந்தார். பின்னர்த் திருவதி கையை யடைந்து திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளை வழிபட்டுப் போற்றினார். இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருச்சிற்றம் பலத்தினைத் தன்னகத்தே கொண்டு திகழும் பொற்பதியாகிய பெரும் பற்றப் புலியூரை வந்தடைந்தார். அங்குக் கூத்தப் பெருமானைப் போற்றித் தம் உள்ளத்தே பொங்கியெழுந்த சிவஞானமாகிய மெய் யுணர்வினால் சிவானந்தத் திருக்கூத்தினைக் கண்டுகளித்து ஆராத பெருவேட்கையினால் தில்லைப் பதியில் சிலகாலம் தங்கியிருந்தார்.

29 Mar 2013

திருத்தொண்டர் புராணத்தில்:திருமூலர்


                               அருண்மொழித் தேவராகிய சேக்கிழாரடிகள், திருத் தொண்டத் தொகையின் விரியாகத் தாம் இயற்றிய திருத்தொண்டர் புராணத்திலே திருமூல நாயனாரது வரலாற்றினை இருபத்தெட்டுப் பாடல்களால் விரித்துக் கூறியுள்ளார்.

28 Mar 2013

திருத்தொண்டர் திருவந்தாதியில்:திருமூலர்

              திருமந்திர மாலையாகிய இத்திருவருட் பனுவலை அருளிச் செய்தவர், இறைவனருளால் எண்வகைச் சித்திகளும் பெற்றுச் சிவமே பெறுந்திருவினராய் எல்லாவுயிர்களிடத்தும் அருளுடையராய்ப் பன்னெடுங்காலம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்து `நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்` என்னும் நல்ல குறிக்கோளுடைய ராய்த் தாமுணர்ந்த ஞானப்பொருளைத் தண்ணார் தமிழால் உலகத்தார்க்கு வழங்கியருளிய திருமூல நாயனாராவர். இவ்வாசிரியரை.

``நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்`


-தி.7 ப.35 பா.5


               என நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையிற் பரவிப் போற்றியுள்ளார். செந்தமிழ் நாட்டின் சிறந்த சிவயோகியாய் முக்காலமுணர்ந்த அறிவராகிய திருமூலநாயனாரது வரலாறு, திருத்தொண்டத் தொகையின் வகையாகிய (தி.11) திருத்தொண்டர் திருவந்தாதியிற் சுருக்கமாகவும் விரிநூலாகிய திருத்தொண்டர் புராணத்தில் விரிவாகவும் விளக்கப் பெற்றுள்ளது. நம்பியாண்டார் நம்பிகள் தாம் இயற்றிய (தி.11) திருத்தொண்டர் திருவந்தாதியில்,
குடிமன்னு சாத்தனூர்க் கோக்குல


மேய்ப்போன் குரம்பைபுக்கு


முடிமன்னு கூனற் பிறையாளன்


றன்னை முழுத்தமிழின்


படிமன்னு வேதத்தின் சொற்படி


யேபர விட்டெ னுச்சி


அடிமன்ன வைத்த பிரான் மூல


னாகிய அங்கணனே. -தி.11 ப.33 பா.36


           எனவரும் திருப்பாடலில் திருமூல நாயனாரது வரலாற்றை வகுத்துக் கூறியுள்ளார். ``நற்குடிகள் நிலைபெற்று வாழும் சாத்தனூரிலே பசுக் கூட்டத்தை மேய்ப்போனாகிய இடையனது உடம்பிற் புகுந்து, சென்னியிலே நிலைபெற்ற வளைந்த பிறைச் சந்திரனை யணிந்த சிவபெருமானை முழுமை வாய்ந்த தமிழிற் கூறியவண்ணமே நிலைத்த வேதங்கள் சொல்லியபடியே பரவிப் போற்றி எனது தலையிலே தன் திருவடியினை நிலைபெறச் செய்தருளிய பெரியோன் திருமூலன் என்னும் பெயரையுடைய அருளாளனாவன்`` என்பது இத் திருப்பாடலின் பொருளாகும். சிவயோகியராகிய சித்தர் புகுந்திருந்த உடம்பு சாத்தனூரில் ஆநிரை மேய்க்கும் மூலன் என்னும் இடைய னுடைய உடம்பு என்பதும், இறைவன் அருள்வழி அவ்வுடம்பிற் புகுந்த சிவயோகியார் ஞான நிறைவுடைய முழுத் தமிழின்படியும் வேதத்தின் சொற்படியும் பிறைமுடிப் பெருமானாகிய சிவபெரு மானைப் பரவிப் போற்றிச் சிவாகம வேதப் பொருளைச் செந்தமிழால் அருளிச் செய் தார் என்பதும் இத் திருவந்தாதியால் இனிது புலனாதல் காணலாம்.

27 Mar 2013

செந்தமிழ்ச் சிவாகமம்:-திருமூலர்



`சிவபூமி` எனப் போற்றப் பெறுஞ் சிறப்புவாய்ந்த நம் நாட்டின் தொன்மை வாய்ந்த சமயமாகத் திகழ்வது; சைவ சமயமாகும். உலகமக்கள் உள்ளத்திலே தெய்வம் உண்டு என்னும் தெளிவினை நல்கி அன்பு நெறியில் ஒழுகப்பணித்து அறிவு நெறியை வளர்ப்பன தெய்வநெறிச் சிவம் பெருக்கும் சைவ சமய அருளாசிரியர்கள் அருளிய பன்னிரு திருமுறைகளாகும். திருமுறைப் பனுவலாகிய அருள் நூல்களுள் பத்தாம் திருமுறையாகத் திகழ்வது, தமிழ் மூவாயி ரமாகிய திருமந்திரமாகும்.

திருமந்திரமாலை என்னும் இத்திருமுறை, சைவசித்தாந்த சாத்திரமாகவும் இறைவன் திருவருளைப் போற்றிப் பரவும் தோத்திர மாகவும் விளங்குந் தனிச் சிறப்புடையது; வேத நெறியாகிய உலகியலொழுக்கத்தையும் மிகு சைவத் துறையாகிய சிவாகமவுண்மைகளையும் இனிய தமிழால் விரித்து விளக்குவது. உலக மக்கள் எல்லோரும் பொதுவாக மேற்கொள்ளுதற்குரிய நல் வாழ்க்கை முறையினையும் சிவநெறிச் செல்வர்களாற் சிறப்பாக மேற் கொள்ளத்தக்க ஞானயோக நுண்பொருள்களையும் ஒருங்கே விளக்குவதாய்ச் சைவசித்தாந்த மெய்ந்நூற் பொருளை அறிவுறுத்தும் செந்தமிழ்ச் சிவாகமமாகத் திகழ்வது

25 Mar 2013

திருமூலர்


                      திருமூலர் அல்லது திருமூல நாயனார் சேக்கிழார் சுவாமிகளால் புகழ்ந்து பேசப்பட்ட 63 நாயன்மார்களுள் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார். இவர் வாழ்ந்த காலம் சரியாகத் தெரியவில்லை. தற்கால ஆராய்ச்சியாளர்கள் 3ம் நூற்றாண்டு|மூன்றாவது நூற்றாண்டிலிருந்து]] ஐந்தாவது நூற்றாண்டுக்குள் வாழ்ந்திருக்கலாம் என்னும் கருத்தினைத் தெரிவிக்கிறார்கள். இவர் அருளிச்செய்த நூல் திருமந்திரமாலையாகும். இது 3000 பாடல்களைக் கொண்டது. இதனைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.

24 Mar 2013

ஈழத்துச் சித்தர்கள்

  • கடையிற் சுவாமிகள்
  • செல்லப்பா சுவாமி்
  • சிவயோக சுவாமி
  • யாழ்ப்பாணத்துச் சுவாமி
  • சித்தானைக்குட்டி சுவாமிகள்
  • பெரியானைக்குட்டி சுவாமிகள்
  • சிவாச் சித்தர்
  • பரமகுரு சுவாமிகள்

இவர்களும் சித்தர்கள்தாம் என்று சில புத்தகங்களில் உள்ளது

            இவர்களும் சித்தர்கள்தாம் என்று சில புத்தகங்களில் உள்ளது. ஆயினும் இவர்கள் பாடிய பாடல்கள் காணக் கிடைப்பது இல்லை.

சித்தர் மரபு அடங்கிய தலம்
எனாதிச் சித்தர்

சேட(ஷ)யோகியார்

காரைச் சித்தர்

குடைச் சித்தர்

பூகண்டம் வன்னியர்
புலிப்பாணி வேடர்
வியாசர் சந்திர குலம்
சோதி முனி பள்ளர்
டமரகர் மறவர்
வரரிடி(ஷி) கள்ளர்
அறிவானந்தர் வள்ளுவர்
ச(ஜ)மதக்கினி சைனர்
சண்டேசர் வள்ளுவர்

22 Mar 2013

ஏனைய சித்தர்கள் பெயர்கள், குலங்கள் மற்றும் அவர்கள் செய்த தொழில்கள்


சித்தர்கள் மரபு அடங்கிய தலம்
இராம தேவர்

இராமலிங்க சுவாமிகள் கருணீகர் குலம் மேட்டுக்குப்பம்
கமல முனி உவச்சர் திருவாரூர்
கடுவெளிச் சித்தர்

கணபதி தாசர்

காக புசுண்டர் சமணர் அன்னவாசல்
காளைச் சித்தர்

கோரக்கர் மராட்டியர் / கள்ளர் பேரூர்(கோவை)
கைலயக் கம்பளிச் சட்டை முனி

சிவவாக்கியர் சங்கர குலம்
சூரியானந்தர்

சுந்தரானந்தர் அகமுடையார் மதுரை
தன்வந்திரி அந்தணர் வைத்தீசுவரன் கோயில்
பதஞ்சலியார் கள்ளர் இராமேசுவரம்
பத்திரகிரியார்

பட்டினத்தார்

பீரு முகமது

பூரணானந்தர்

மச்ச முனி செம்படவர் திருப்பரங்குன்றம்
வாம தேவர் ஓதுவார் அழகர் மலை
வான்மீகர் வேடர் எட்டிக்குடி
மதுரை வாலைச் சாமி

உரோமரிஷி மீனவர்

சித்தர்களின் பெயர்கள், குலங்கள் மற்றும் அவர்கள் செய்த தொழில்கள்

                   உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்த சித்தர்களின் பெயர்கள், குலங்கள் மற்றும் அவர்கள் செய்த தொழில்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன:

சித்தர் மரபு அடங்கிய தலம்
நந்தீசர் வேதியர் காசி
அகத்தியர் வேளாளர் அனந்த சயனம்
திருமூலர்  வேளாளர் தில்லை(சிதம்பரம்)
புண்ணாக்கீசர் இடையர் நாங்குனேரி
புலத்தியர்
யாழ்ப்பாணம்
பூனைக் கண்ணர் எகிப்தியர் எகிப்து
இடைக்காட்டு சித்தர் இடையர் திருவண்ணாமலை
போகர் சீனக் குயவர் பழனி
புலிக் கையீசர்

கருவூரார் அகமுடையார் கருவூர்
கொங்கண சித்தர் கன்னட இடையர் திருப்பதி
காளங்கி நாதர் சீனத்து ஆசாரியார் காஞ்சீபுரம்
அழுகண்ணச் சித்தர் சீனத்து ஆசாரியார் திருக்குறுங்குடி
அகப்பேய் சித்தர் வேளாளர் அழகர் மலை
பாம்பாட்டி சித்தர் கோசாயி விருத்தாசலம்
தேரையர் வேதியர் பொதிகை மலை
குதம்பைச் சித்தர் இடையர் மாயூரம்
சட்டை முனி்
திருவரங்கம்

20 Mar 2013

பஞ்சமாசித்தர்கள

கரூர் அருகில் உள்ள அய்யர் மலையில் உள்ள சுனையில் பஞ்சமாசித்தர்களான
  1. பஞ்சமுக சுரேஸ்வர சித்தர்,
  2. சதுர்முக சுரேஸ்வர சித்தர்,
  3. திரிபலாதர சுரேஸ்வர சித்தர்,
  4. ஸ்கந்த பதுமபலாதி சித்தர்,
  5. திரி மதுர நீற்று முனீஸ்வர சித்தர் வசிக்கிறார்கள்.

பதினெண் சித்தர்களும் சமாதி

பதினெண் சித்தர்களும் சமாதியான ஸ்தலங்களைப் பற்றி குறிப்பிடும் பழைய ஓலைச்சுவடி :

ஆதி காலத்திலே தில்லை திருமூலர்
அழகுமலை இராமதேவர்
அனந்த சயன கும்பழனி திருப்பதி கொங்கணவர்
கமலமுனி ஆரூர்
சோதி அரங்க சட்டமுனி கருவை கருவூரார்
சுந்தரானந்தர் கூடல்
சொல்லும் எட்டிக்குடியில் வான்மீகரோடு நற்
றாள் காசி நந்திதேவர்
ப்லாதி அரிச்சங்கரன் கோவில் பாம்பாட்டி
பழனி மலை போகநாதர்
திருப்பரங்குன்றமதில் மச்சமுனி
பதஞ்சலி இராமேசுவரம்
சோதி வைத்தீஸ்வரம் கோவில் தன்சந்திரி பேரையூர்
கோரக்கர் மாயூரங்குதம்பர்
திருவருணையோர் இடைக்காட சமாதியிற்
சேர்ந்தனர் எமைக் காக்கவே.

இது நெற்கட்டும் செவல் மன்னர் பூலித்தேவர் காலத்தில் உள்ள ஓலைச்சுவடியின் சான்று.

மதுரை அழகர் கோவிலின் முன்பாக 18-ம் படி கருப்பண்ணசாமியாக உள்ள 18 படிகளும், 18 சித்தர்கள் ஆவார்கள். ஆடி 18 அன்று சிறப்பு பூசை நடைபெறுகிறது.

19 Mar 2013

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்


1. திருமூலர் - சிதம்பரம்.
2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர் - திருப்பதி, திருமலை
6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)
11. கோரக்கர் – பேரூர்.
12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13. சிவவாக்கியர் - கும்பகோணம்.
14. உரோமரிசி - திருக்கயிலை
15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.
16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23. இராமதேவ சித்தர் - அழகர் மலை
24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
26. காசிபர் - ருத்ரகிரி
27. வரதர் - தென்மலை
28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.
29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.
34. கமல முனி - ஆரூர்
35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.
37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.
39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.
40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.
41. வள்ளலார் - வடலூர்.
42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43. சதாசிவ_பிரமேந்திரர்_சமாதிசதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்
45. ராகவேந்திரர் - மந்திராலயம்.
46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47. குமரகுருபரர் - காசி.
48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.
51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.
53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.
54. யுக்தேஸ்வரர் - பூரி.
55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.
58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.
59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.
63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.
65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.
71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.
74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.
100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.

18 Mar 2013

தமிழ்ச் சித்தர்கள்


தமிழ் நாட்டில் இருந்த சித்தர்கள் பதினெட்டுப் பேர் (பதினெண்சித்தர்கள்) என்று கூறுவர்.அவர்கள் வருமாறு;-


1 திருமூலர் 2 இராமதேவ சித்தர் 3 கும்பமுனி 4 இடைக்காடர் 5 தன்வந்திரி 6 வால்மீகி
7 கமலமுனி 8 போக நாதர் 9 மச்ச முனி 10 கொங்கணர் 11 பதஞ்சலி 12 நந்தி தேவர்
13 போதகுரு 14 பாம்பாட்டி 15 சட்டைமுனி 16 சுந்தரானந்த தேவர் 17 குதம்பைச் சித்தர் 18 கோரக்கர்



 எனினும், பிற்காலத்தில் அகத்தியர் போன்ற பல சித்தர்கள் இவர்கள் வழியில் தோன்றினர்.

16 Mar 2013

சித்தர்களும் சூஃபிகளும்

                              இஸ்லாமிய மதத்தின் சூஃபி மரபினரை தமிழ் சித்தர்களுடன் இணைத்து பார்க்கும் வழக்கும் உண்டு. பல இஸ்லாமிய பின்புலம் கொண்டவர்களும் சித்தர்களாகக் கொள்ளப்படுகின்றார்கள். இராமதேவ சித்தர் என்பவர் மெக்காவிலுள்ள நபிகள் நாயகம் என்ற இசுலாமிய குருவிற்கு சீடராய் இருந்திருக்கிறார்.
அல்லாவைப் பற்றிய சித்தர் பாடல்
மூலம்: சித்தர்கள் இராச்சியம்

               யாகோபு சித்தரின் யாகோபு சுண்ணகாண்டம் என்னும் நூலின் கடவுள் வணக்கப் பாடல்.

"ஆனந்தமாய் நிறைந்த அல்லா பாதம்
அடுத்துநின்ற அடுத்துநின்ற சித்தநபிமார்கள்
பாதம்போற்றி தானந்த மகமதுவை தொழுது
போற்றி தாட்டிகமாய் சுண்ணமென்ற காண்டம்
தன்னை வானந்த மாகவே அறுநூறாக
வகயாகப் பாடினேன் வண்மையாகக்
கோனந்த மெய்ப்பொருளா மின்னூல்தன்னை
குறிப்பாகப் பாடினேன் கூர்ந்து பாரே" -    யாக்கோபு என்ற இராமதேவர்

14 Mar 2013

இசுலாமிய சித்தர்கள்

                 இந்திய வரலாற்றில், இசுலாமிய சித்தர்களின் காலத்தை இருவகையாக பிாிக்கலாம்
  1. கி.பி. 400 -க்கும், 700 -க்கும் இடைப்பட்ட காலம் - மந்திராயன காலம் என அழைக்கப்படுகிறது.
  2. கி.பி. 700-க்கும் 1200-க்கும் இடைப்பட்ட காலம் - வஜ்ராயன காலம் என அழைக்கப்படுகிறது.
                              சித்தர்கள் அல்லது அனுபூதி மந்திரர்கள், எப்பொழுதும் பர்வதத்துடன் தொடர்பு கொண்டவர்கள். பர்வதம், நாகர்ஜுனாின் இருப்பிடம் ஆகும். இத்தகைய சித்த மரபு, பெளத்தத்தின் தாக்கத்தினால் பின் தொடர்ந்ததாகும். இத்தகைய தாக்க,ம் சூபிகளிடத்திலும் இருந்தது. தமிழில் குணங்குடி மஸ்தான், சதக்கத்துல்லா அப்பா, உமறுப் புலவர், சேகனாப் புலவர், குஞ்சு மூசு லெப்பை, தக்கலை பீர் முகமது அப்பா ஆகியோரிடத்திலும், இதற்கான தூண்டல்கள் இருந்தன. இவர்களின் நூல்களை நாம் வாசிக்கும் போது, சித்த மரபு சார்ந்த பல்வேறு குறிப்புகளை அறியலாம்.

13 Mar 2013

சித்தர்களின் ஞானம்

                       மதவாதிகள், ஆத்திகர்கள், அவனன்றி ஓரணுவும் அசையாது என்ற நம்பிக்கை உள்ளவர்கள். மக்கள் நூறாண்டுகள் தான் உயிர் வாழமுடியும் என்று நம்புகின்றனர். ஆனால் சித்தர்களின் நம்பிக்கை இதற்கு மாறானது. நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழமுடியும் என்பது சித்தர்களின் நம்பிக்கை.

சித்தர்களின் நவீன அறிவியல் ஆராய்ச்சி

                     சித்தர்கள் கண்டறிந்த வாத வித்தையே சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சியாகும். உலோக வகைகள், உப்பு வகைகள், பாஷாண வகைகள், வேர் வகைகள், பட்டை வகைகள், பிராணிகளி்ன் உடம்பிலே உற்பத்தியாகும் கோரோசனை கஸ்தூரி, மூத்திரம், மலம் முதலியவைகளின் குணங்களை ஆராய்ந்து கண்டிருக்கின்றனர்.

                                   காட்டிலும் மலையிலும் குகையிலும் வாழ்ந்த சித்தர்கள் தங்கள் ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கிறார்கள். இன்றிருப்பதைப்போல பரிசோதனை சாலைகள் அன்று இருக்கவில்லை. எனினும் அவர்களின் ஆராய்ச்சிகள் இன்றைய விஞ்ஞான ஆய்வுடன் ஒத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

11 Mar 2013

சித்தர்களின் இரசவாதம்

                             "சித்தர்களில் சிலர் இரும்பைப் பொன்னாக்கும் (ரசவாதம்) வேலைகளில் மறைவாக ஈடுபட்டிருந்திருக்கின்றனர். இந்த வகையான முயற்சி கடந்த நூற்றாண்டுகளில் உலகெங்கிலும் நடந்திருக்கின்றது." இன்றைய வேதியியல் அறிவின் படி இரும்பையோ அல்லது வேறு எந்த ஒரு தனிமத்தையோ பொன்னாக்க முடியாது. எனினும் அப்படிப்பட்ட முயற்சிகளே இன்றைய வேதியல் துறையின் முன்னோடி என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான்.

                              மருந்துகளில் ரசம் முதன்மையானது. இதன் மூலம் இரசபஸ்பம், ரசசெந்தூரம், ரசக்கட்டு, முதலிய மருந்துகள் தயாரிக்கப்பட்டன. தீராத பல கொடிய நோய்களுக்கு இம்மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. எனவே ரசவாதம் என்றால் ரசத்தின் மாறுதல்களை அறிவது என்று பொருள்.
போகர் என்ற சித்தர் எழுதிய பாடல்கள் வேதியல் தொடர்பான பாடல்களில் முக்கியத்துவம் பெறுகின்றன. அவை தமிழில் அமைந்தாலும், அவர் ஒரு சீனர் என்ற ஒரு கருத்தும் இருக்கின்றது.

8 Mar 2013

சித்த வைத்தியம்


            சித்தர்களின் வைத்திய முறைகள் காலம் குறிப்பிட முடியாத பழமையானதாக இருக்கிறது. பண்டைத்தமிழரின் விஞ்ஞான அறிவின் சிகரமே சித்த வைத்தியமாகும். மனித குலத்தைக் காக்கும் பொருட்டு, அன்றைய கலாச்சாரத்திற்கேற்பவும், மனித வாழ்க்கை முறைக்கு தேவையான, அனைத்து ஆரோக்கிய முறைகளையும் மிக எளிய வைத்திய முறைகளை, அனைவரும் செய்துகொள்ளும் பொருட்டு தந்தனர். அவ்வைத்திய முறைகளை, அவர்களின் இருப்பிடத்திலே அருகில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு, மனித குலத்தைக் காத்து வந்தனர்.

                  மக்கள் அனைவரும், ஒழுக்கந்தவறாமல் வாழவேண்டும் என்றும், பொய், சூது, கொலை, குடி, விபச்சாரம், கூடா ஒழுக்கம் ஆகியவை உடல் நோயை உண்டாக்கும் என்றும் யோகப்பயிற்சியிலே வாழ்வில் வெற்றி பெறமுடியும் என்றும் உடல் வலிமையுடன் நீண்டநாள் வாழ முடியும் என்றும் சித்தர்கள் பல பாடல்கள் பாடியுள்ளனர்.

                "உலகில் சாவாமைக்கு வழிகாண முடியும் என்ற உயரிய நோக்கம் கொண்ட மருத்துவ முறை சித்த மருத்துவமே."

சித்தர்களின் கொள்கை

                     பரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பது சித்தர் கொள்கை.
உன்னுள்ளும் இருப்பான் என்னுள்ளும் இருப்பான்
உருவம் இல்லா உண்மை அவன்.
இதை உணர்ந்தார் இங்கே உலவுவதில்லை
தானும் அடைவார் அந்நிலை தன்னை.

6 Mar 2013

சித்தர்கள்

                  சித்தர்கள் தமிழ் மரபின் விதிவிலக்குகள். பொது வாழ்வு முறை, வழி முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு, வழி முறைகளை உருவாக்கி சமூகத்துடன் ஒரு முரண்பாடான உறவு வைத்திருப்பவர்கள். சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். அறிவு படைத்தவர்கள் சித்தர்கள்.

                 சித்தர்கள் மீவியற்கை (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத (material) இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பொருளியல் வாதிகள் (materialists) அல்ல. மெய்ப்புலன் காண்பது அறிவு என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிச நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.

              சித்தர்களை அடையாளப்படுத்துவதோ, வரையறுப்பதோ கடினம். ஏனென்றால், ஒவ்வொருவரின் தனித்துவமும், மரபை மீறிய போக்குமே சித்தர்களின் வரைவிலக்கணம். தரப்படுத்தலுக்கோ, வகைப்படுத்தலுக்கோ இலகுவில் சித்தர்கள் உட்படுவதில்லை. எனினும், தமிழ் சூழலில், வரலாற்றில் சித்தர்கள் என்பவர்கள் என்றும் இருக்கின்றார்கள்.

            சாதி, சமயம், சாத்திரம், சடங்குகள் மீறிய உலக நோக்கு, பொது இல்லற, துறவற வாழ்முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு முறைகள். விந்தையான செயல்கள், பட்டறிவு தமிழ், சீரிய ஆராய்ச்சி ஆகிய அம்சங்கள் சித்தர்களை வருணிப்பன எனலாம். அப்படிப்பட்ட மேலோட்டமான வருணிப்புக்களுக்கு மேலாக, சித்தர்கள் என்பவர்கள் சித்தி அடைந்தவர்கள். தங்கள் இருப்பை (existence), உடம்பை, சிந்தையை, சுற்றத்தை, இவ்வுலகின் இயல்பை நோக்கி தெளிவான புரிதலை (understanding), அறநிலை உணர்வை (external awareness), மெய்யடைதலை (actuality) சித்தி எய்தல் எனலாம்.

            சித்தர்களை புலவர்கள், பண்டாரங்கள், பண்டிதர்கள், சன்னியாசிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஓதுவார்கள், கலைஞர்கள், கவிஞர்கள், அரசர்கள், மறவர்கள், ஆக்கர்கள், புலமையாளர்கள், அறிவியலாளர்கள், பொது மக்கள் ஆகியோரிடம் இருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்தலாம். சித்தர்களின் மரபை, கோயில் வழிபாடு, சாதிய அமைப்பை வலியுறுத்தும் சைவ மரபில் இருந்தும், உடலையும் வாழும்போது முக்தியையும் முன்நிறுத்தாமல் "ஆத்மன்", சம்சாரம் போன்ற எண்ணக்கருக்களை முன்நிறுத்தும் வேதாந்த மரபில் இருந்தும் வேறுபடுத்திப் பார்க்கலாம். இன்று, சித்தர் மரபுஅறிவியல் வழிமுறைகளுடன் ஒத்து ஆராயப்படுகின்றது. எனினும், சித்தர் மரபை தனி அறிவியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது அதன் பரந்த வெளிப்படுத்தலை, அது வெளிப்படுத்திய சூழலை புறக்கணித்து குறுகிய ஆய்வுக்கு இட்டு செல்லும்