24 Apr 2013

திருமந்திரச் சொல்லாட்சிகள்: திருமூலர்

வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் தெளிந் துணர்ந்த சிவஞானச் செல்வராகிய திருமூலர், தாம் சிவயோக நிலையி லிருந்து சிந்தித்துணர்ந்த சிவாகம உண்மைகளை இந்நாட்டவர் யாவரும் ஓதியுணர்ந்து உய்தல் வேண்டும் என்னும் அருள்நோக்குடன் திருமந்திரப் பனுவலை அருளிச் செய்தமையால், அவரருளிய பாடல்களில் சமய சாத்திரக் குறியீடுகளாகிய பதி, பசு, பாசம்; ஆணவம், கன்மம், மாயை; சித்து, அசித்து; சரியை, கிரியை, யோகம், ஞானம்; சத்து, அசத்து, சதசத்து; வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம்; நாதம், விந்து, சத்தி, சாத்துமான், வயிந்தவம்; சத்தாதி வாக்கு மனாதிகள், சாக்கிராதீதம், சுத்தம், துரியம் விஞ்ஞானர், பிரளயாகலத்து அஞ்ஞானர்; இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி; கவச நியாசங்கள் முத்திரை; பத்மாசனம், பத்திராசனம், சிங்காதனம்; பூரகம், கும்பகம், ரேசகம் என்பன முதலாகவுள்ள வடசொற்களும் சொற்றொடர்களும் அக்காலத்துப் பொது மக்களிடையே வழங்கிய வழக்குச் சொற்கள் சிலவும் இடம் பெற்றுள்ளன. தமிழ் வடமொழி என்னும் இருமொழிகளையும் கலந்து திருமூலர் தாமே படைத்து வழங்கிய அணுவன் (தி.10 பா.2501), மாயாள் (தி.10 பா.399), என்றாற்போலும் புதுச் சொற்களும் திருமந்திரத்தில் இடம் பெற்றுள்ளன. வேத ஆகமங்களின் முடிந்த முடிபாகிய சைவசமயத் தத்துவம் என்ற பொருளில் சித்தாந்தம் என்ற சொற்றொடரை முதன் முதல் வழங்கியவர் திருமூல நாயனா ரேயாவர். சுந்தரர் காலத்துப் பல்லவ மன்னனாகிய இரண்டாம் நரசிங்க வர்மன், தான் காஞ்சியில் அமைத்த கைலாசநாதர் கோயிலிற் பொறித்துள்ள வடமொழிக் கல்வெட்டில், சைவ சித்தாந்த மார்க்கத்தைப் பின் பற்றியவன் எனத் தன்னைக் குறித்திருப்பது இங்கு நோக்கத்தகுவதாகும்.

ஆரியம் தமிழ் என்னும் இருமொழிகளையும் உணர்ந்து இமயம் முதல் குமரிவரையுள்ள எல்லாத் தலங்களிலும் போக்கு வரவு புரிந்த தவமுனிவராகிய திருமூலர் அருளிய திருமந்திரப் பாடல்களில் சமய சாத்திரக் குறியீடுகளாகிய வட சொற்களும் சேரி வழக்குச் சொற்களும் விரவிக் காணப்படுதல் இயல்பே; திருமந்திரத்தின் மொழிக்கலப்பு ஒன்றே பற்றித் திருமூலர் காலத்தின் தொன்மை யினைக் குறித்து ஐயுறுதற்குச் சிறிதும் இடமில்லை.

பிற சமயத்தைப் பற்றிய குறிப்புக்கள் திருமூலர், தம் நூலில் ஆறுசமயங்கள் எனவும் அவற்றிற் பல வாகிய நூறு சமயங்கள் எனவும் இந்நாட்டில் வழங்கும் சமயங்களைக் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் வேத வழக்கொடு மாறுபட்ட புறச் சமயங்களாகிய புத்த, சமண மதங்களைப் பற்றிய குறிப்பெதுவும் புறச் சமய தூடணம் பற்றிய திருமந்திரப் பாடல்களில் இடம் பெறவில்லை. இதனைக் கூர்ந்து நோக்குங்கால், புத்த சமண மதங்கள் தமிழ் நாட்டிற் புகுந்து யாண்டும் பரவித் தமிழ் மக்களது வாழ்க்கையில் வேரூன்றி நிலைபெறுதற்கு முன்னரேயே சிவயோகியராகிய திருமூலர், சிவாகமப் பொருள் குறித்த இத்திருமந்திரப் பனுவலை இயற்றி யருளினார் என்பது இனிது விளங்கும்.

No comments:

Post a Comment