18 May 2013

பிற்கால வரலாறு - பட்டினத்து அடிகள்


                  இனிப் பட்டினத்து அடிகள் வரலாற்றில் மேலும் சில செய்திகள் சேர்ந்து வழங்கக் காணலாம். மண்ணுலகில் உள்ள தலங்களைத் தரிசிக்க விரும்பிய குபேரனைச் சிவபெருமான் நிலவுலகில் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் சிவநேசர் ஞானகலாம்பிகை ஆகியோர்க்கு மகனாகப் பிறக்குமாறு செய்தருளினார். பெற்றோர் திருவெண்காடு சென்று வேண்டிப் பெற்ற பிள்ளையாதலின் திருவெண்காடர் எனப் பெயரிட்டு வளர்த்தனர். ஐந்து வயதில் தந்தையாரை இழந்த திருவெண்காடர் கல்வி பயின்று இறை உணர்வோடு வாணிபம் புரிந்து வந்தார்.

                  ஒருநாள் சிவபிரான் இவர் கனவில் அந்தணராகத் தோன்றி திருவெண்காடு வருமாறு பணிக்க அவ்வாறே திருவெண்காடர் திருவெண்காடு சென்றபோது கனவிடைத் தோன்றிய அந்தணர் காட்சி தந்து சிவதீட்சை வழங்கி அவர் கையில் ஒரு சம்புடத்தைக் கொடுத்து மறைந்தருளினார். சம்புடம் இவர் கைக்குக் கிடைத்தவுடன் தானே திறந்து கொண்டது. அதில் விநாயகர் சிவலிங்கம் இருக்கக் கண்டு திருவெண்காடர் நாள்தோறும் அவற்றைப் பூசித்து வந்தார். சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் இயற்றினார். நெடுநாள் ஆகியும் மகப்பேறு வாய்க்காமையால் இறைவனை வேண்டி வந்தார்.

No comments:

Post a Comment