தமிழ் முனிவராகிய அகத்தியரைக் காண விரும்பித் திருக் கயிலாயத்தினின்றும்
தென்றிசை நோக்கிவந்த சிவயோகியார், வட நாட்டிற் சிவத்தலங்கள் பலவற்றையும்
வழிபட்டு வருபவர், தென் னாட்டிற் காஞ்சி நகரத்தையடைந்து அங்கு வாழும்
சிவயோகியர் பலரொடும் அளவளாவினார் எனச் சேக்கிழாரடிகள் குறித்தலாலும், தமிழ்
நாட்டிற் பொதிய மலையில் தங்கிய அகத்திய முனிவரொடு பழகிய நட்பினால் அவரைக்
காணப் புறப்பட்டு வந்தமையாலும், தமிழகத்தின் தெற்கெல்லையாகிய
குமரித்துறையில் அருட்சத்தியாகிய அம்மையார் திருக்கோயில் கொண்டு
எழுந்தருளியிருத்தலையும், தம் காலத்தில் தமிழ்நாடு ஐந்து மண்டலங்களாகப்
பகுக்கப்பட்டிருத் தலையும், வழிப்போவார் அச்சமின்றிச் செல்லவொண்ணாதபடி
கொங்கு நாட்டில் வழிப்பறித் தொழில் நிகழ்தலையும் இந்நூலிற்
குறித்துள்ளமையாலும் இந்நூலாசிரியராகிய சிவயோகியார் மூல னுடம்பிற் புகுந்து
திருமூலர் என்னும் பெயரைப் பெறுவதற்கு முன்னரும் தமிழ் நாட்டிற்
பல்லாண்டுகள் வாழ்ந்த பயிற்சியுடையார் என்பது நன்கு தெளியப்படும். சிவாகமப்
பொருளை நன்றாகத் தமிழிற் செய்யும்படி இறைவன் தம்மை நன்றாகப் படைத்தனன்
எனத் தம்மைத் தமிழொடு தொடர்பு படுத்திக் கூறுதலால் அவர் தமிழ்க்குலத் தொடர்
புடையவர் என்பதும், எனவே தென்தமிழ் நாட்டிலிருந்து வட கயிலையை அடைந்து
மீண்டு தென்னாடுபோந்து திருவாவடு துறையிற் சிவயோகத் தமர்ந்து
செந்தமிழாகமத்தை அருளிச்செய்து சிவபரம்பொருளுடன் இரண்டறக் கலந்த
தமிழ்முனிவர் திருமூல நாயனாரென்பதும் நன்கு துணியப்படும்.
No comments:
Post a Comment