7 Oct 2012

சூரியனின் வாழ்க்கைச் சுழற்சி

                   விண்மீன்களும் வாழ்க்கைச் சுழற்சிக்கு உட்பட்டவையே. உலோகசெறிவு மிக்க விண்மீன்கள் வகையைச் சார்ந்த சூரியன் தோராயமாக 4.57 பில்லியன் வருடங்களுக்கு முன் ஹைட்ரஜன் மூலக்கூறு மேகங்களின் மோதலால் பால் வழியில் தோன்றியது. தோராயமாக வட்டவடிவில் இருக்கும் சூரியனின் கோளப் பாதை பால் வழி விண்மீன் மண்டல மையத்திலிருந்து சுமார் 26,000 ஒளியாண்டுகள் அப்பால் அமைந்துள்ளது.

                              சூரிய உருவாக்கத்தைக் கணிக்க இரு வகையான கணக்கீடுகள் பயன் படுத்தப்படுகின்றன. முதல் முறையில் சூரியனின் பரிணாம வளர்ச்சியில் தற்போதய நிலை, கணிப்பொறி உருவகப்படுத்துதல் முறையில் கணிக்கப்படுகிறது. இம்முறையில் சூரியனின் நிறை, வெப்ப ஆற்றல், ஒளியின் மூலம் அறியப்படுகின்ற தனிமங்களின் அளவு ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகின்றன. இம்முறை மூலம் சூரியனின் வயது 4.57 பில்லியன் வருடங்கள் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது . மற்றொரு முறையான கதிரியக்க அளவியல் முறையில் சூரிய மண்டலத்தின் மிகமுந்தைய துகள்களை ஆய்வதன் மூலம் சூரியனின் வயதை கண்டறிவது. இம்முறையில் சூரியனின் வயது 4.567 பில்லியன் வருடங்கள் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது .

                  ஆயிரக்கணக்கான விண்மீன்களின் வாழ்க்கைச் சுழற்சியை ஆய்வாளர்கள் ஆய்ந்ததில் சூரியன் தனது நடுவயதை அடைந்து விட்டதைக் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் சூரியனில் உள்ள ஹைட்ரஜன் அணுக்கள் அணுக்கரு புணர்வு விளைவினால் ஈலியம் அணுக்களாக மாற்றப்படுகின்றன. ஒவ்வொரு வினாடியும் சுமார் 4 மில்லியன் டன் எரிபொருள் ஆற்றலாக மாற்றப்படுகின்றது. இவ்வாற்றலையே நாம் சூரிய ஒளியாகவும், வெப்பமாகவும் பெறுகிறோம். சூரியத் தோற்றத்தில் இருந்து சுமார் 100 பூமியின் எடையுள்ள பொருள் ஆற்றலாக இதுவரை மாற்றப்பட்டுள்ளது.

                             அளவில் பெரிய விண்மீன்கள் தம் பரிணாம வளர்ச்சியின் முடிவில் அவற்றில் உள்ள எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் தம் ஈர்ப்பு விசையில் மாற்றம் ஏற்படுவதனால் நியூட்ரான் விண்மீனாகவோ அல்லது கருங்குழியாகவோ மாறுகின்றன. இம்மாற்றத்தை அடையும் முன் அவற்றின் வெளிப்பகுதி ஈர்ப்பு நிலை ஆற்றலால் வெடித்து சிதறுகின்றது. இந்நிகழ்வை மீயொளிர் விண்மீன் வெடிப்பு என்று கூறலாம்.

                      சூரியனின் நிறை மீயொளிர் விண்மீன் வெடிப்பு (supernova) ஏற்படப் போதுமானது அன்று. எனவே 5 பில்லியன் வருடங்களுக்கு பின், சூரியன் ஒரு சிவப்புப் பெருங்கோளாக (red giant) மாறும். அதன் வெளி அடுக்குகள் விரிவடைந்து உள்பகுதியில் உள்ள ஹைரஜன் எரிபொருள் அணுக்கரு புணர்வு விளைவுக்கு உட்பட்டு ஈலியமாக மாறும். வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து 100 மில்லியன் கெல்வின் என்ற நிலையில் ஈலியம் புணர்வு விளைவு ஆரம்பிக்கப்படும். இவ்விளைவின் விளைவுப் பொருள் கார்பன் ஆகும். .

சூரியனின் வாழ்க்கை சுழற்சி
 
                        இந்நிலையில் பூமியின் உள்ளமை ஐயத்துக்குரியது. ஏனெனில், சிவப்புப் பெருங்கோளாக சூரியன் மாற்றம் பெறும்போது அதன் ஆரம் தற்போதய ஆரத்தை விட சுமார் 250 மடங்கு பெரியதாக விரிவடையும். அத்தகைய விரிவடைதல் பூமியின் சுற்றுவட்ட பாதையை முழுவதுமாக சூரியனுக்குள் இழுத்து விடும். ஆனால் சூரியனின் நிறை பெரிதும் குறைந்திருப்பதால் கோள் பாதைகள் விரிவடைய வாய்ப்பு உண்டு. நவீன ஆராய்ச்சி முடிவுகளின்படி சூரியன் பூமியை முழுவதுமாக விழுங்கி விடவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது.  சில இயற்பியல் விதிமுறைகளின் படி பூமி சூரியனால் விழுங்கப்படாமல் இருப்பினும் அதிக வெப்பத்தினால் பூமியில் உள்ள அனைத்து நீரும் ஆவியாகி வெளியேறி விடும். மேலும் காற்று மண்டலம் முழுவதுமாக அழிக்கப்பட்டு உயிரினங்களின் வாழ்க்கை முற்று பெறும். ஒவ்வொரு பில்லியன் ஆண்டுகளுக்கும் சூரியனின் வெப்பம் 10% அதிகமாகிறது. 

                      சிவப்புப் பெருங்கோள் நிலையினைத் தொடர்ந்து சூரியனின் வெளி அடுக்குகள் வீசி எறியப்படும். அவை கோள வான்புகையுருவை (planetary nebula) உருவாக்க கூடும். மீதம் இருக்கும் கோள் மெதுவாகக் குளிர்ந்து குள்ள வெள்ளைக் கோளாக (white dwarf) மாறும். இதே விண்மீன் பரிமாணமே சிறிய மற்றும் நடுத்தர அளவு நிறையுள்ள விண்மீன்களிடம் காணப்படுகின்றது. 

2 Oct 2012

பால் வீதியில் கதிரவனின் அமைவிடம்


பால் வீதியின் வடிவம் - சுருள் வடிவம் கொண்ட பால் வீதியில் பல வளைவுகள் அமைந்துள்ளன. அவற்றுள் ஓரியன் வளைவில் சூரியன் அமைந்துள்ளது. மஞ்சள் நிற புள்ளி சூரியனை குறிக்கிறது.
              நமது விண்மீன் மண்டலமான பால்வீதியின் உள் வட்டத்தில் அமைந்துள்ள ஓரியன் வளைவில் சூரியன் அமைந்துள்ளது. சூரியன் அமைந்துள்ள இடத்தில் இருந்து விண்மீன் மண்டல மையம் சுமார் 24 ,800 ஒளியாண்டுகள் இருக்கலாம் எனறு கணிக்கப்படுகிறது. நமது சூரியன் அமைந்துள்ள ஓரியன் வளைவுக்கும், அருகில் உள்ள பெர்சியஸ் வளைவுக்கும் இடையே உள்ள தொலைவு சுமார் 6 ,500 ஒளியாண்டுகள் ஆகும்.
சூரிய உச்சி (solar apex) என்ற பதம் சூரியன் பால் வழியில் பயணிக்கும் திசையை கூற பயன்படுத்தப் படுகிறது. தற்பொழுது சூரியன் வேகா விண்மீனை நோக்கி பயணம் செய்கிறது. வேகா விண்மீன் ஹெர்குலஸ் விண்மீன் தொகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. கதிரவனின் கோளொழுக்கு நீள்வட்ட பாதையில் அமைந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

                    சூரிய மண்டலம் ஒருமுறை விண்மீன் மண்டலத்தை (பால் வீதி) சுற்றி வரச் சுமார் 225–250 மில்லியன் வருடங்கள் ஆகலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இக்காலம் ஒரு விண்மீன் மண்டல ஆண்டு என்று அழைக்கப்படுகிறது 

               இதன் மூலம், சூரியன் தன் தோற்றத்தில் இருந்து தோராயமாக 20–25 தடவைகள் விண்மீன் மண்டலத்தை சுற்றி வந்துள்ளது என்பதை அறியலாம். மற்றொரு வகையில் கூறினால் மனித தோற்றத்தில் இருந்து இன்று வரை தனது பாதையில் சுமார் 1/1250 பங்கு தூரத்தை கடந்துள்ளது. விண்மீன் மண்டல மையத்தில் இருந்து நோக்கினால் சூரியனின் கோளோழுக்க வேகம் தோராயமாக 251 km/s  . இந்த வேகத்தில் 1400 வருடங்களில் சூரிய மண்டலம் பயணித்த தூரம் 1 ஒளியாண்டு ஆகும்.

1 Oct 2012

புவியின் மீது ஞாயிற்றின் ஆற்றல்


                     சூரிய ஒளியே புவியில் கிடைக்கும் ஆற்றலின் மூல ஆதாரமாகும். சூரிய மாறிலி (solar constant) என்பது ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் சூரிய ஒளியின் காரணமாக கிடைக்கும் ஆற்றலை குறிக்கும். சூரிய மாறிலி, சூரியனில் இருந்து ஒரு வானியல் அலகு தூரத்தில் கிடைக்கும் ஆற்றலை குறிக்கும். இது தோராயமாக 1368 வாட் / சதுர மீட்டர் ஆகும். சூரிய ஒளி பூமி மேற்பரப்புக்கு வந்தடைவதற்கு முன் வளி மண்டலத்தால் பெரிதும் மட்டுப்படுத்தப் படுகிறது. குறைவான அளவிலான வெப்பமே தரையை வந்தடைகிறது. ஒளிச்சேர்க்கை யின் போது தாவரங்கள் சூரிய ஒளி ஆற்றலை வேதியல் ஆற்றலாக மாற்றுகின்றன. சூரிய மின்கலனில், சூரிய ஒளியாற்றல்/ வெப்பம் மின்சார ஆற்றலாக மாற்றப்படுகிறது. பெட்ரோலியம் சார்ந்த எரிபொருள்களில் இருந்து கிடைக்கும் ஆற்றலும் சூரிய ஒளியில் இருந்து மறைமுகமாக, (மக்கிய தாவரங்களில்) இருந்து கிடைக்கும் ஆற்றலே. சூரியனில் இருந்து வரும் புறஊதா கதிர்கள் நுண்நுயிர் கொல்லியாகும். மேலும் இக்கதிர்கள் மாந்தர்களிடம் வேனிற் கட்டி போன்ற கொடிய விளைவுகளையும், மற்றும் உயிர்ச்சத்து D (விட்டமின் D) உற்பத்தி ஆகிய நன்விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. . புறஊதா கதிர்கள் பூமியை சூழ்ந்துள்ள ஓசோன் படலம் மூலம் மட்டுப் படுத்தப் படுகிறது. இக்கதிர்களே மனிதரின் வேறுபட்ட தோல் நிறத்துக்கும் காரணமாக அறியப்படுகிறது.