16 May 2013

தன்வினை தன்னைச்சுடும் - பட்டினத்து அடிகள்

 பெருஞ்செல்வரான திருவெண்காடர் துறவு பூண்டு பலர் வீடுகளுக்கும் சென்று பிச்சை ஏற்று உண்ணுதலைக் கண்டு வெறுப்புற்ற உறவினர் சிலர் அவர்தம் தமக்கையாரைக் கொண்டு நஞ்சு கலந்த அப்பத்தை அளிக்கச் செய்தனர். அதனை உணர்ந்த அடிகள் அதனை வாங்கி `தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்` எனக் கூறி தமக்கையார் வீட்டின் இறப்பையிற் செருகிய அளவில் வீடு தீப்பற்றி எரிந்தது. அடிகள் காவிரிப்பூம்பட்டினத்தில் சிலநாள் தங்கி யிருந்து தன் தாயார் இறந்தபோது அவருக்கு ஈமக்கடன் செய்து முடித்துத் திருவிடைமருதூர் சென்று அங்குச் சில காலம் தங்கி மருதப் பிரானை வழிப்பட்டுப் பின் திருவாரூர் முதலிய தலங்களை அடைந்து அங்கிருந்தபோது முன்பு தமக்குக் கணக்கராய் இருந்த சேந்தனாரை அரசன் சிறைப்படுத்திய செய்தி கேட்டு `மத்தளை தயிருண்டானும்` என்ற பாடலைப் பாடிய அளவில் சிவகணங்கள் சேந்தனாரைச் சிறை யிலிருந்து மீட்டு அவர் முன் கொணர்ந்து நிறுத்தின. சேந்தனாரும் திருவெண்காட்டு அடிகளைப் பணிந்து `பிறவிச் சிறையிலிருந்து விடுதலை பெறும்` உபதேச மொழிகளைக் கேட்டு உய்தி பெற்றார். பின்னர் சீகாழி சிதம்பரம் கச்சி ஏகம்பம் முதலான தலங்களை வணங்கிக் கொண்டு திருஒற்றியூர் சென்றார்.

No comments:

Post a Comment