18 May 2013

பிற்கால வரலாறு - பட்டினத்து அடிகள்


                  இனிப் பட்டினத்து அடிகள் வரலாற்றில் மேலும் சில செய்திகள் சேர்ந்து வழங்கக் காணலாம். மண்ணுலகில் உள்ள தலங்களைத் தரிசிக்க விரும்பிய குபேரனைச் சிவபெருமான் நிலவுலகில் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் சிவநேசர் ஞானகலாம்பிகை ஆகியோர்க்கு மகனாகப் பிறக்குமாறு செய்தருளினார். பெற்றோர் திருவெண்காடு சென்று வேண்டிப் பெற்ற பிள்ளையாதலின் திருவெண்காடர் எனப் பெயரிட்டு வளர்த்தனர். ஐந்து வயதில் தந்தையாரை இழந்த திருவெண்காடர் கல்வி பயின்று இறை உணர்வோடு வாணிபம் புரிந்து வந்தார்.

                  ஒருநாள் சிவபிரான் இவர் கனவில் அந்தணராகத் தோன்றி திருவெண்காடு வருமாறு பணிக்க அவ்வாறே திருவெண்காடர் திருவெண்காடு சென்றபோது கனவிடைத் தோன்றிய அந்தணர் காட்சி தந்து சிவதீட்சை வழங்கி அவர் கையில் ஒரு சம்புடத்தைக் கொடுத்து மறைந்தருளினார். சம்புடம் இவர் கைக்குக் கிடைத்தவுடன் தானே திறந்து கொண்டது. அதில் விநாயகர் சிவலிங்கம் இருக்கக் கண்டு திருவெண்காடர் நாள்தோறும் அவற்றைப் பூசித்து வந்தார். சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் இயற்றினார். நெடுநாள் ஆகியும் மகப்பேறு வாய்க்காமையால் இறைவனை வேண்டி வந்தார்.

17 May 2013

சிவசமாதி - பட்டினத்து அடிகள்


           திருவெண்காட்டு அடிகள் திருஒற்றியூரில் தங்கியிருந்த போது, கடற்கரையில் விளையாடும் சிறுவர்களோடு தாமும் சேர்ந்து மணலில் புதைதல் பின் வெளிப்படல் போன்ற விளையாட்டுக்களை நிகழ்த்தினார். முடிவில் சிறுவர்களைக் கொண்டு மணலால் தன்னை மூடச் செய்தார். நெடுநேரம் ஆகியும் அவர் வெளிப்படாதிருத்தலைக் கண்டு சிறுவர்கள் மணலை அகழ்ந்து பார்த்தபோது அடிகள் சிவ லிங்கமாக வெளிப்பட்டருளினார்.

16 May 2013

தன்வினை தன்னைச்சுடும் - பட்டினத்து அடிகள்

 பெருஞ்செல்வரான திருவெண்காடர் துறவு பூண்டு பலர் வீடுகளுக்கும் சென்று பிச்சை ஏற்று உண்ணுதலைக் கண்டு வெறுப்புற்ற உறவினர் சிலர் அவர்தம் தமக்கையாரைக் கொண்டு நஞ்சு கலந்த அப்பத்தை அளிக்கச் செய்தனர். அதனை உணர்ந்த அடிகள் அதனை வாங்கி `தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்` எனக் கூறி தமக்கையார் வீட்டின் இறப்பையிற் செருகிய அளவில் வீடு தீப்பற்றி எரிந்தது. அடிகள் காவிரிப்பூம்பட்டினத்தில் சிலநாள் தங்கி யிருந்து தன் தாயார் இறந்தபோது அவருக்கு ஈமக்கடன் செய்து முடித்துத் திருவிடைமருதூர் சென்று அங்குச் சில காலம் தங்கி மருதப் பிரானை வழிப்பட்டுப் பின் திருவாரூர் முதலிய தலங்களை அடைந்து அங்கிருந்தபோது முன்பு தமக்குக் கணக்கராய் இருந்த சேந்தனாரை அரசன் சிறைப்படுத்திய செய்தி கேட்டு `மத்தளை தயிருண்டானும்` என்ற பாடலைப் பாடிய அளவில் சிவகணங்கள் சேந்தனாரைச் சிறை யிலிருந்து மீட்டு அவர் முன் கொணர்ந்து நிறுத்தின. சேந்தனாரும் திருவெண்காட்டு அடிகளைப் பணிந்து `பிறவிச் சிறையிலிருந்து விடுதலை பெறும்` உபதேச மொழிகளைக் கேட்டு உய்தி பெற்றார். பின்னர் சீகாழி சிதம்பரம் கச்சி ஏகம்பம் முதலான தலங்களை வணங்கிக் கொண்டு திருஒற்றியூர் சென்றார்.

6 May 2013

காதற்ற ஊசி - பட்டினத்து அடிகள்


            சில நாட்களில் சென்றபின் அனைத்து வரட்டிகளையும் தவிட்டையும் சோதித்தபோது அவற்றுள் ஒன்றும் இல்லாதிருத்தலைக் கண்டு தன் மகன்மீது சினம் கொண்டு அவரைத் தண்டிக்கும் கருத் துடன் தனி அறையில் பூட்டி வைக்கச் செய்து வாணிபத்தைத் தான் கவனித்து வரலானார். மருதவாணரின் தாயார் அவரைக்காண அறைக்குச் சென்றபோது சிவபிரான் மருகனோடும் உமையம்மை யோடும் அங்கிருத்தலைக் கண்டு தன் கணவர்க்கு அறிவிக்க அவரும் சென்று அவ்வருட் காட்சியைக் கண்டு அறையைத் திறக்குமாறு பணித்தார். மருதவாணரிடம் தன் செயலுக்கு மனம் வருந்தி மன்னிப்பு வேண்டினார். மருதவாணர் மெய்ந்நூற்பொருளை அவருக்கு உபதேசம் செய்தார். எனினும் பெருஞ்செல்வராகிய அவர்க்கு உலகப் பற்று ஒழியாமை கண்டு காதற்ற ஊசி ஒன்றையும் நூலையும் `காதற்ற ஊசியும் வாராது காண்நும் கடைவழிக்கே` என்றெழுதிய ஒலை நறுக்கினையும் ஒரு பெட்டியில் வைத்து மூடி வளர்ப்புத் தாயிடம் அளித்துத் திருவெண்காடரிடம் அதனைச் சேர்ப்பிக்குமாறு கூறி இல்லத்தை விட்டு மறைந்து சென்றார்.

             திருவெண்காடர் மருதவாணர் அளித்ததாக மனைவி அளித்த பெட்டியை வாங்கித் திறந்து பார்த்தபோது காதற்ற ஊசி, நூல் ஆகியன வும் அறவுரை அடங்கிய ஓலை நறுக்கும் இருக்கக்கண்டு அவை உணர்த்தும் குறிப்பை உணர்ந்து இருவகைப் பற்றுக்களையும் அறவே விட்டுத் துறவறமாகிய தூய நெறியை மேற்கொண்டு ஊர் அம்பலத்தை அடைந்து அங்கேயே வாழ்ந்து வரலானார். திருவெண்காடர் தூறவு பூண்டதை அறிந்த அரசன் அவரை அணுகி `நீர் துறவறம் பூண்டதனால் அடைந்த பயன் யாது` என வினவிய போது `நீ நிற்கவும் யான் இருக்கவும் பெற்ற தன்மையே அது` என மறுமொழி புகன்றார். எல்லோரும் திருவெண்காடரைத் திருவெண்காட்டு அடிகள் என அழைத்தனர்.

5 May 2013

வரட்டியும் தவிடும் - பட்டினத்து அடிகள்

              வந்தடைந்த வணிகர்களில் சிலர் திருவெண்காடரிடம் மருத வாணர் பித்தராய் வீணே பொருளைச் செலவிட்டு தவிடும் வரட்டி யுமே வாங்கி வந்துள்ளார் என்று குறை கூறினார். திருவெண்காடர் மருதவாணர் வாங்கி வந்த வரட்டியைச் சோதித்துப் பார்த்தபோது அவற்றுள் மாணிக்கக் கற்கள் இருத்தலையும் தவிட்டைச் சோதித்த போது அதனுள் தங்கப்பொடி மறைத்து வைக்கப்பட்டிருத்ததையும் கண்டு தன் மகன் கடல் கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க இவ்வாறு செய்துள்ளான் என வியந்து அதனை வணிகர்களிடம் கூறிப் பெருமையுற்றார்.

2 May 2013

கடல் வாணிபம் -பட்டினத்து அடிகள்

          திருவெண்காடரின் மகனாக வந்தடைந்த மருதவாணர் வளர்ந்து சிறந்து வாணிபத்தில் வல்லவராய்ப் பெரும் பொருள் ஈட்டித் தம் பெற்றோரை மகிழ்வித்து வந்தார். வணிகர் சிலருடன் கடல் கடந்து சென்று வாணிபம் புரிந்து பெரும் பொருள் ஈட்டி திருக்கோயில் பணிகட்கும், சிவனடியார்கட்கும் அளித்து வந்தார். அவ்வாறு கடல் வாணிபம் செய்து வரும்போது ஒருமுறை வணிகர்கள் பலரோடு கடல் கடந்து சென்றவர் அங்கிருந்து எருமுட்டைகளையும் தவிட்டையுமே வாங்கித் தம் மரக்கலத்தில் நிரப்பிக்கொண்டு ஊர் திரும்பினார்.

           வழியில் அனைவர் மரக்கலங்களும் காற்றில் திசைமாறிப் போயின. உடன் வந்த வணிகர்கள் உணவு சமைத்தற்கு இவரிடம் கடனாக எரு மூட்டைகளை வாங்கிப் பயன்படுத்தி உணவு சமைத்தனர். சில நாட்கள் கழித்து அனைவரும் காவிரிப்பூம்பட்டினம் மீண்டனர்.

1 May 2013

சிவசருமர்- பட்டினத்து அடிகள்


                    திருவிடைமருதூரில் சிவனடித் தொண்டு பூண்டொழுகிய சிவசருமர் என்னும் அந்தணர் வறுமையால் துயருறுவதைக்கண்டு மனம் பொறாத மகாலிங்கப் பெருமான் மருதவாணர் என்னும் திருப் பெயரோடு அவர்முன் தோன்றி காவிரிப்பூம்பட்டினத்தில் மகப் பேறின்றி வருந்தும் திருவெண்காடரிடம் தன்னை விற்றுப் பொருள் பெற்று வறுமை நீங்குமாறு கூறியருளினார். சிவசருமர் இறைவன் கட்டளைப்படி மருதவாணருடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று திருவெண்காடரிடம் மருதவாணரை அளித்துப் பொருள் பெற்றுத் திருவிடைமருதூர் மீண்டு வறுமை நீங்கி இன்புற்றார்.