சிவயோகியார் திருமூலராவதற்கு முன் அட்டமாசித்திகளும் கைவரப்பெற்றவர்
என்பதும், பசுக்களின் துயரத்தினை நீக்கும் பொருட்டே இறைவன் அருளின்வழி தம்
உடம்பினை ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டு மூலன் என்னும் ஆயனது உடம்பிற்
புகுந்து பசுக்களைச் சாத்தனூரிற் செலுத்தி மீண்டுவந்து தம் பழையவுடம்
பினைத் தேடிப் பார்த்து இறைவனருளால் அவ்வுடம்பு மறைந்தொழிய அதனைக்
காணாதவராய், தமது முன்னைய உடம்பினாற் பயனில்லை யெனவுணர்ந்து இறைவன்
திருக்குறிப்பின் வண்ணம் மூலன் உடம்பிலேயே நெடுங்காலம் விரும்பித்
தங்கியிருந்தனர் என்பதும்,
``அரிய தெனக்கில்லை அட்டமாசித்தி
பெரிதருள் செய்து பிறப்பறுத்தானே`` -தி.10 பா.626
எனவும்
நந்தியருளாலே நாதனாம் பேர்பெற்றோம்
நந்தியருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருளாஅது என்செயும் நாட்டினில்
நந்திவழிகாட்ட நானிருந் தேனே. -தி.10 பா.7
எனவரும் திருமூலர் வாய்மொழிகளால் நன்கு விளங்கும். மேற்குறித்த
திருமந்திரம் 7ஆம் பாடலில் `நந்தி அருளா அது` எனத் திருமூலர் சுட்டியது,
இறைவனால் மறைக்கப்பட்ட தமது பழைய உடம்பினை. நந்தியால் அருளப்படாத அப்பழைய
உடம்பு நாட்டிலுள்ளோர்க்கு என்ன பயனைத் தரவல்லது? ஒரு பயனையுந் தாராது என
அதனை, வெறுத்து விடும் நிலையில் `நந்தி அருளா அது என்செயும் நாட்டினில்`
(தி.10 பா.7) என வினவிய குறிப்பு ஆழ்ந்துணரத் தகுவதாகும்.
No comments:
Post a Comment