20 Apr 2013

திருமந்திரம் அருளிய காலம்:

 
             இனி, திருமூல நாயனார் இத் திருமந்திரப் பனுவலை அருளிச் செய்த காலம் எது என்பது இங்கு ஆராய்தற்குரியதாகும்.

           கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் `நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்` (தி.7 ப.35. பா.5) எனப் போற்றியிருத்தலாலும், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய தேவார ஆசிரியர் பாடியருளிய திருப்பதிகங்களில், திருமூலர் அருளிய திருமந்திரப் பாடல்களின் சொற்றொடர்களும் பொருள் களும் எடுத்தாளப்பட்டிருத்தலாலும், திருமூல நாயனார் காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதென்பது தெளிவு. திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத்தமர்ந்து ஆண்டுக் கொரு திருப்பாடலாக மூவாயிரந் திருப்பாடல்களை அருளிச் செய்தார் எனப் பெரிய புராணம் கூறும். சேக்கிழாரடிகள் கூறுமாறு திருமூலர் இந்நிலவுலகில் நெடுங்காலம் சிவ யோகத்தில் அமர்ந்திருந்தார் என்பது,

``ஒப்பில் எழு கோடி யுகமிருந்தேனே` -தி.10 பா.13
எனவும்
``இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி`` -தி.10 பா.19
     எனவும் வரும் திருமூலர் வாய்மொழிகளால் நன்கு துணியப்படும். திருமூலரால் `இக்காயம்` எனச் சுட்டப் பட்டது. மூலனுடைய உடம்பெனக் கொள்ளுதல் பொருந்தும்

No comments:

Post a Comment