6 Mar 2013

சித்தர்கள்

                  சித்தர்கள் தமிழ் மரபின் விதிவிலக்குகள். பொது வாழ்வு முறை, வழி முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு, வழி முறைகளை உருவாக்கி சமூகத்துடன் ஒரு முரண்பாடான உறவு வைத்திருப்பவர்கள். சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். அறிவு படைத்தவர்கள் சித்தர்கள்.

                 சித்தர்கள் மீவியற்கை (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத (material) இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பொருளியல் வாதிகள் (materialists) அல்ல. மெய்ப்புலன் காண்பது அறிவு என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிச நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.

              சித்தர்களை அடையாளப்படுத்துவதோ, வரையறுப்பதோ கடினம். ஏனென்றால், ஒவ்வொருவரின் தனித்துவமும், மரபை மீறிய போக்குமே சித்தர்களின் வரைவிலக்கணம். தரப்படுத்தலுக்கோ, வகைப்படுத்தலுக்கோ இலகுவில் சித்தர்கள் உட்படுவதில்லை. எனினும், தமிழ் சூழலில், வரலாற்றில் சித்தர்கள் என்பவர்கள் என்றும் இருக்கின்றார்கள்.

            சாதி, சமயம், சாத்திரம், சடங்குகள் மீறிய உலக நோக்கு, பொது இல்லற, துறவற வாழ்முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு முறைகள். விந்தையான செயல்கள், பட்டறிவு தமிழ், சீரிய ஆராய்ச்சி ஆகிய அம்சங்கள் சித்தர்களை வருணிப்பன எனலாம். அப்படிப்பட்ட மேலோட்டமான வருணிப்புக்களுக்கு மேலாக, சித்தர்கள் என்பவர்கள் சித்தி அடைந்தவர்கள். தங்கள் இருப்பை (existence), உடம்பை, சிந்தையை, சுற்றத்தை, இவ்வுலகின் இயல்பை நோக்கி தெளிவான புரிதலை (understanding), அறநிலை உணர்வை (external awareness), மெய்யடைதலை (actuality) சித்தி எய்தல் எனலாம்.

            சித்தர்களை புலவர்கள், பண்டாரங்கள், பண்டிதர்கள், சன்னியாசிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஓதுவார்கள், கலைஞர்கள், கவிஞர்கள், அரசர்கள், மறவர்கள், ஆக்கர்கள், புலமையாளர்கள், அறிவியலாளர்கள், பொது மக்கள் ஆகியோரிடம் இருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்தலாம். சித்தர்களின் மரபை, கோயில் வழிபாடு, சாதிய அமைப்பை வலியுறுத்தும் சைவ மரபில் இருந்தும், உடலையும் வாழும்போது முக்தியையும் முன்நிறுத்தாமல் "ஆத்மன்", சம்சாரம் போன்ற எண்ணக்கருக்களை முன்நிறுத்தும் வேதாந்த மரபில் இருந்தும் வேறுபடுத்திப் பார்க்கலாம். இன்று, சித்தர் மரபுஅறிவியல் வழிமுறைகளுடன் ஒத்து ஆராயப்படுகின்றது. எனினும், சித்தர் மரபை தனி அறிவியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது அதன் பரந்த வெளிப்படுத்தலை, அது வெளிப்படுத்திய சூழலை புறக்கணித்து குறுகிய ஆய்வுக்கு இட்டு செல்லும்

No comments:

Post a Comment