28 Mar 2013

திருத்தொண்டர் திருவந்தாதியில்:திருமூலர்

              திருமந்திர மாலையாகிய இத்திருவருட் பனுவலை அருளிச் செய்தவர், இறைவனருளால் எண்வகைச் சித்திகளும் பெற்றுச் சிவமே பெறுந்திருவினராய் எல்லாவுயிர்களிடத்தும் அருளுடையராய்ப் பன்னெடுங்காலம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்து `நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்` என்னும் நல்ல குறிக்கோளுடைய ராய்த் தாமுணர்ந்த ஞானப்பொருளைத் தண்ணார் தமிழால் உலகத்தார்க்கு வழங்கியருளிய திருமூல நாயனாராவர். இவ்வாசிரியரை.

``நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்`


-தி.7 ப.35 பா.5


               என நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையிற் பரவிப் போற்றியுள்ளார். செந்தமிழ் நாட்டின் சிறந்த சிவயோகியாய் முக்காலமுணர்ந்த அறிவராகிய திருமூலநாயனாரது வரலாறு, திருத்தொண்டத் தொகையின் வகையாகிய (தி.11) திருத்தொண்டர் திருவந்தாதியிற் சுருக்கமாகவும் விரிநூலாகிய திருத்தொண்டர் புராணத்தில் விரிவாகவும் விளக்கப் பெற்றுள்ளது. நம்பியாண்டார் நம்பிகள் தாம் இயற்றிய (தி.11) திருத்தொண்டர் திருவந்தாதியில்,
குடிமன்னு சாத்தனூர்க் கோக்குல


மேய்ப்போன் குரம்பைபுக்கு


முடிமன்னு கூனற் பிறையாளன்


றன்னை முழுத்தமிழின்


படிமன்னு வேதத்தின் சொற்படி


யேபர விட்டெ னுச்சி


அடிமன்ன வைத்த பிரான் மூல


னாகிய அங்கணனே. -தி.11 ப.33 பா.36


           எனவரும் திருப்பாடலில் திருமூல நாயனாரது வரலாற்றை வகுத்துக் கூறியுள்ளார். ``நற்குடிகள் நிலைபெற்று வாழும் சாத்தனூரிலே பசுக் கூட்டத்தை மேய்ப்போனாகிய இடையனது உடம்பிற் புகுந்து, சென்னியிலே நிலைபெற்ற வளைந்த பிறைச் சந்திரனை யணிந்த சிவபெருமானை முழுமை வாய்ந்த தமிழிற் கூறியவண்ணமே நிலைத்த வேதங்கள் சொல்லியபடியே பரவிப் போற்றி எனது தலையிலே தன் திருவடியினை நிலைபெறச் செய்தருளிய பெரியோன் திருமூலன் என்னும் பெயரையுடைய அருளாளனாவன்`` என்பது இத் திருப்பாடலின் பொருளாகும். சிவயோகியராகிய சித்தர் புகுந்திருந்த உடம்பு சாத்தனூரில் ஆநிரை மேய்க்கும் மூலன் என்னும் இடைய னுடைய உடம்பு என்பதும், இறைவன் அருள்வழி அவ்வுடம்பிற் புகுந்த சிவயோகியார் ஞான நிறைவுடைய முழுத் தமிழின்படியும் வேதத்தின் சொற்படியும் பிறைமுடிப் பெருமானாகிய சிவபெரு மானைப் பரவிப் போற்றிச் சிவாகம வேதப் பொருளைச் செந்தமிழால் அருளிச் செய் தார் என்பதும் இத் திருவந்தாதியால் இனிது புலனாதல் காணலாம்.

No comments:

Post a Comment