4 Apr 2013

திருவாவடுதுறையில் சிவயோகம்: திருமூலர்

                 சாத்தனூர்ப் பொதுமடத்தில் சிவயோகத்தில் அமர்ந்திருந்த திருமூலர். யோகுகலைந்து எழுந்து முதல்நாளில் பசுக்கள் வந்த வழியினையே நோக்கிச் சென்று தமது உடம்பினை மறைத்து வைத்த இடத்தை அடைந்து தம் உடம்பைத் தேடிப்பார்த்தார். வைத்த இடத்தில் அவ்வுடம்பு காணப்படவில்லை. அது மறைந்து போன செயலை மெய்யுணர்வுடைய சிந்தையில் ஆராய்ந்து தெளிந்தார்.

`              சிவபெருமான் உயிர்கள் பால்வைத்த பெருங்கருணை யினாலே அருளிச் செய்த சிவாகமங்களின் அரும்பொருள்களை இந் நிலவுலகில் திருமூலரது வாக்கினால் தமிழிலே வகுத்துரைக்கக் கருதிய திருவருட்டிறத்தால் சிவயோகியாரது முன்னைய உடம்பினை இறைவர் மறைப்பித்தருளினார்` என்ற உண்மையினைத் திருமூலர் தமது முற்றுணர்வினால் தெளிய வுணர்ந்தார். சாத்தனூரிலிருந்து தம்மைப் பின்தொடர்ந்து வந்த ஆயர் குலத்தவர்க்கும் தமக்கும் எத்தகைய உறவும் இல்லை என்று அவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்தார், அவர்களெல்லோரும் தம்மை விட்டு நீங்கியபின் சிவபெருமான் திருவடிகளைச் சிந்தித்து அவ்விடத்தை விட்டு நீங்கித் திருவாவடுதுறைத் திருக்கோயிலை அடைந்தார்; அங்கு எழுந்தருளிய அம்மையப்பரை வணங்கி அத் திருக்கோயிலின் மேற்றிசையிலுள்ள அரசமரத்தின் கீழ்த் தேவாசனத்தில் சிவயோகத்தில் அமர்ந்து, நெஞ்சத் தாமரையில் வீற்றிருந்தருளும் செம்பொருளாம் சிவபரம் பொருளுடன் உணர்வினால் ஒன்றியிருந்தார்.

                    திருமந்திரம் அருளிச் செய்தல் இங்ஙனம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூல நாயனார். ஊனொடு தொடர்ந்த பிறவியாகிய தீய நஞ்சினாலுளவாம் துயரம் நீங்கி உலகத்தார் உய்யும் பொருட்டு ஞானம் யோகம் சரியை கிரியை என்னும் நால்வகை நன்னெறிகளும் நால்வகை மலர்களாக விரிந்து ஞானமணம் பரப்பிச் சிவானந்தத் தேன் பிலிற்றும் திருமந்திர மாலையாகிய செந்தமிழ்ப் பனுவலை இறைவன் திருவடிக்கு அணிந்து போற்றும் நிலையில்,


ஒன்றவன் தானே, இரண்டவன் இன்னருள்,


நின்றனன் மூன்றினுள், நான்குணர்ந்தான், ஐந்து


வென்றனன், ஆறு விரிந்தனன், ஏழும்பர்ச்


சென்றனன், தானிருந் தானுணர்ந் தெட்டே.-தி.10 பாயி. பா.2


                  என்னும் திருப்பாடலைத் தொடங்கி, ஒராண்டுக்கு ஒரு திருப்பாடலாக மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத் தமர்ந்திருந்து மூவாயிரம் திருப் பாடல்களைத் திருவாய் மலர்ந்தருளினார். இவ்வாறு தமிழ் மூவாயிரமாகிய திருமந்திர மாலையை நிறைவு செய்தருளிய திருமூல நாயனார் சிவபெருமானது திரு வருளாலே திருக்கயிலையை யடைந்து இறைவன் திருவடி நீழலில் என்றும் பிரியாதுறையும் பேரின்ப வாழ்வினைப் பெற்று இனி திருந்தார். திருமூலர் அருளிய திருமந்திர மாலை `நலஞ் சிறந்த ஞான யோகக் கிரியா சரியையெலாம் மலர்ந்த மொழிமாலையாகத் திகழ் கின்றது` எனச் சேக்கிழார் பெருமான் திருமூலநாயனார் வரலாற் றினைப் பெரிய புராணத்தில் விரித்துக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment