இங்ஙனம் திருமூல நாயனார் வரலாறாகச் சேக்கிழார் நாயனார் விரித்துரைத்த
நிகழ்ச்சிகள் பலவற்றுக்குத் திருமந்திரத்தில் திருமூலர் தம் வரலாறு கூறும்
முறையில் அருளிச் செய்த திருமந்திரப் பாடல்கள் அகச்சான்றுகளாக அமைந்துள்ளன.
மூலன் என்னும் ஆயனது உடம்பிற் புகுந்து திருமந்திர மாலையை அருளிச் செய்த
முனிவர்பிரான் திருக்கயிலையில் நந்தி தேவர்பால் ஞானோபதேசம் பெற்ற
நான்மறையோகிகளுள் ஒருவர் எனவும் அருளாளராகிய அவர் சாத்தனூரை அடைந்த பொழுது
மூலனால் மேய்க்கப்பெற்ற பசுக்களின் துயரம் நீங்கத் தமது சித்தித் திறத்தால்
தமது உயிரை மூலனது உடம்பிலே புகச் செய்து, திருமூலர் என்னும் பெயர்
பெற்றுத் திருமந்திர மாகிய செந்தமிழ் ஆகமத்தை அருளிச் செய்தார் எனவும்
நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழா ரடிகளும் தெளிவாகக் கூறியிருத்தலால்,
திருமந்திர நூலாசிரியர்க்கு வழங்கும் திருமூலர் என்னும் இப்பெயர் அவர்
மூலன் என்னும் ஆயனது உடம்பிற் புகுந்த பின்னரே உளதாயிற்று என்பது நன்கு
புலனாகும். நந்தி தேவர் பால் அருளுபதேசம் பெற்ற நான்மறை யோகியராகிய அவர்,
தம்முன்னை நிலையில் அவர் பிறந்த ஊர், குடி, பேர் முதலியவற்றை அறிந்து
கொள்ளுதற்குரிய வரலாற்றுச் சான்றுகள் தெளிவாகக் கிடைக்காமையால், அவரது
வரலாறு கூற வந்த சேக்கிழாரடிகள், சிவயோகியார் மூலனுடம்பிற் புகுந்து
திருமூலர் என்னும் பெயர் பெறுவதற்கு முன்னுள்ள அவர்தம் ஊர், பேர், குலம்,
முதலிய வரலாற்றுச் செய்திகளைக் குறித்து எதுவும் கூறாது விட்டார் எனக்
கருதவேண்டியுள்ளது.
No comments:
Post a Comment