விண்மீன் (Star, நாள்மீன், நட்சத்திரம்) என்பது விண்வெளியில்
காணப்படும், ஒரு பெரிய ஒளிரும் கோளமாகும். இரவுநேர வானத்தில் புள்ளிபோல்
தெரியும் நட்சத்திரங்கள் கண்சிமிட்டுவதுபோல் தெரிவது பூமியின் வளிமண்டலத்தின் தாக்கத்தினாலாகும். சூரியன் இதற்கு விதிவிலக்கு. ஏனெனில், வட்டமான தட்டுப்போல் தெரிவதற்கும், பகலில் வெளிச்சம் தருவதற்கும் ஏற்றவகையில் பூமிக்குப் போதிய அளவு அண்மையிலுள்ள விண்மீன் சூரியன் மட்டுமே.
விண்ணில் தெரியும் விண்மீன்களில் கணக்கற்றவை; அளவில் கதிரவனைப் போன்று
பன்மடங்கு பெரியனவாய் உள்ள விண்மீன்களும் உள. விண்மீன்களில் உள்ள அணுக்கருக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து வேறு பொருள்களாய்த் திரிந்த வண்ணமாய் உள்ளன. இவ்வாறு அணுக்கரு இணைவு வினை நிகழும் பொழுது எராளமான ஆற்றல் வெளிவிடுகின்றது. வெளிவிடும் ஆற்றலின் ஒரு முகம்தான் கண்ணுக்குப் புலப்படும் ஒளி.
சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமிக்கு அண்மையிலுள்ள நட்சத்திரம் புராக்சிமா செண்டோரி என்பதாகும். இது பூமியிலிருந்து 4.2 ஒளியாண்டுகள் (4 இலட்சம் கோடி கிலோமீட்டர்கள்) தொலைவில் உள்ளது. அதாவது இந்த நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளி பூமியை வந்தடைய 4.2 ஆண்டுகள் செல்லும். அறியப்பட்டுள்ள அண்டவெளியில் 70 கோடி கோடி கோடி (70,000,000,000,000,000,000,000) நட்சத்திரங்கள் இருக்கக்கூடுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
பெரும்பாலான விண்மீகள் 100 கோடிக்கும், 1000 கோடிக்குமிடைப்பட்ட
ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. சில அண்டத்தின் மதிப்பிடப்பட்ட வயதான 1370 கோடி
ஆண்டுகளளவு தொன்மையானவை. மிகச் சிறிய நட்சத்திரங்களிலிருந்து நமது
சூரியனிலும் ஆயிரம் மடங்குகள் பெரிதான, அதாவது 160 கோடி கிலோமீற்றர் விட்டமுள்ள
விண்மீன்கள் வரை, அண்டவெளியில் உள்ளன. தங்கள் ஆற்றல் மூலங்களை முற்றாக
இழந்தபின், சொந்த ஈர்ப்பு விசையின் கீழ் ஒடுங்கி மிகச்சிறிய அளவினதாக
மாறிவிடுகின்ற விண்மீன்கள் , வெண் குறுமீன்கள் (White Dwarf), நியூத்திரன் விண்மீன்கள், கருந்துளைகள் எனப் பலவாறு அழைக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment