12 Jul 2012

கடி-மணம்

               'கடி' என்பது பல பொருள் தரும் உரிச்சொல் ஆகும். 'கடி' என்ற சொல்லுக்கு நீக்குதல், காப்பு என்று பொருள் கூறுவர். மணமகளின் கன்னித்தன்மை நீங்கி, கற்பு வாழ்வு மேற்கொள்ளல் என்ற நிலையிலும், ஆண், பெண் இருவரும் இணைந்து ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக அமையும் இல்லற வாழ்வைத் துவங்குதல் என்ற வகையிலும் 'கடி' என்ற சொல் திருமணத்தைக் குறித்தது. "கடிமகள்". "வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து" போன்ற குறிப்புகளால் காப்பு என்ற பொருளில் 'கடி' என்ற சொல் இடம் பெறுதலைக் காணலாம்.
கடிமணம் என்பது நல்ல மணம், நன்மை பெற உதவும் மணம் என்றும் பொருளைத் தருகிறது. மணநாள் விளக்கம் என்ற நூலில் 'கடிநாள் கோலத்து காமன் இவனென' என்று மண நாளில் இடம் பெற்ற ஒப்பனை சுட்டப்படுகிறாது. இலக்கிய வழக்கில் கடி என்ற சொல் மணத்தையும் , மணத்தொடர்புடைய மண நாள், மண வேளை ஆகியவற்றைச் சுட்டவும் பயன்படுகிறது. சீவக சிந்தாமணியில் 'கடிசேர் மணமும் இனி நிகழும் காலமென்க' என்றும் 'கடிமணம் எய்தும் களிப்பினால்' என்றும் சுட்டப்படுதலால் கடி, மணம் என்ற இரு சொற்களும் இணைந்தும் திருமணத்தைக் குறிக்க வழக்கில் இடம் பெற்றமையை உணரலாம்.

No comments:

Post a Comment