மணம் என்ற சொல்லுக்குக் 'கூடுதல்' என்பது பொருள். இதன் வேர்ச்சொல் மண்
என்பதாகும். இன்று பொது நிலையில் மணம் என்பது நறுமணத்தைக் குறிப்பினும்,
பழங்கால வழக்கில் இச்சொல் பல பொருளை உடையதாக இருந்தது. 'மண்ணுதல்' என்ற
சொல்லின் பொருள் கழுவுதல், நெருங்குதல், கலத்தல், கூடுதல், அழகுபெறுதல்
எனப்பல. திருமணத்தைக் குறிக்கும் ' மணம் என்ற சொல் எவ்வாறு அமைந்தது என்பது
தெரியவில்லை. மண்
இயற்கையிலேயே மணம் உடையது. அதனை மண் மணம் என்பர். இது தமிழர் வழக்கு.
இல்லறத்திற்கு நுழைவாயிலாக அமைவதனை 'மணம்' என்ற சொல்லால் குறிப்பிட்டதன்
நோக்கம் மண்ணைப் (நிலத்தை) போல பொறுமை, அமைதி, எதையும் தாங்கும் வன்மை
இவற்றை மணமக்கள் பெறுதல் வேண்டும் என்பதே அடிப்படை என்று கூறுவோரும் உளர்.
மனமொத்து, வாழ்வு முழுவதும் மணம் பெற்று நிகழ்வதற்கு ஏதுவான இந்நிகழ்ச்சியை
மணம் என்று பெயரிட்டனர். சிறப்பான, மேன்மையான ஒன்றைக் குறிப்பிட 'திரு
என்ற அடை கொடுத்து அழைப்பது தமிழர் மரபாகையால் இல்லற வாழ்வின் அடிப்படையாக
அமையும் மணம் "திருமணம்" என்று அழைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment