சித்தர்கள், சித்த மருத்துவம்
தமிழ்ச் சூழலில் தமிழ்ப் பண்பாட்டுடன் ஒரு முரண்பாடான, ஆக்கபூர்வமான உறவை சித்தர்கள்
வைத்திருந்தார்கள். இவர்கள் பெரும் சமய மரபுகளின் குறைகளை
எடுத்துகூறினார்கள். மரபுவழிப் புலவர்கள் பலர் இன்ப அல்லது போற்றி
இலக்கியங்களில் மட்டும் ஈட்பட்டிருக்க சித்தர்கள் மருத்துவம், கணிதம்,
வேதியியல், தத்துவம், ஆத்மீகம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டு தமிழர்
சிந்தனைச் சூழலைப் பலப்படுத்தினார்கள்.
சமயம்
தமிழர்கள் இறை நம்பிக்கை உடையவர்களாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கின்றார்கள். சங்கத் தமிழர்கள் உலகாயுத
போக்கு அல்லது இயற்கை வழிபாட்டையே கொண்டிருந்தனர் என அறிஞர் சிலர்
வாதிட்டாலும், தமிழர்கள் முற்காலம் தொட்டே பல்வேறு சமய மரபுகளை அறிந்தும்
பின்பற்றியும் வந்துள்ளார்கள். பெளத்தம், சமணம், இந்து, இசுலாம், கிறித்தவம்
ஆகிய பெரும் சமய மரபுகளைத் தமிழர்கள் பல்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு
போக்குகளுடன் பின்பற்றி வந்துள்ளார்கள். பெரும்பாலான தமிழர் தமது கடவுளாக முருகனை வணங்குகின்றனர். முருகனை விட அய்யனார், மதுரை வீரன், கண்ணகி (கடவுள்), இசக்கி அம்மன், கறுப்புசாமி, சுடலை மாடன் ஆகிய காவல் தமிழ்க் கடவுள்கள் வழிபாடும் பரவலாக இருக்கின்றது.
நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களின் பக்தி இயக்கம், வள்ளலார் இராமலிங்க அடிகளைப் பின்பற்றிய மனிதநேய இயக்கம், அய்யாவழி ஆகியவை தமிழ்ச் சூழலில் தோன்றி சிறப்புற்றவைதான்.
இன்று திருக்குறளைப்
பொது அற மறையாகவும், இறை நம்பிக்கையை ஏற்றும், அனைத்து சமயங்களுக்கு
இடமளிக்கும் பண்பைப் பேணியும் தமிழர் சமய சிந்தனை, நடைமுறைப் போக்குகள்
அமைகின்றன. அதே வேளை, இறைமறுப்பு (நாத்திகம்), அறியாமைக் கொள்கை (Agnosticism), உலகாயதக் கொள்கை, இயற்கை நம்பிக்கை கொண்ட பல தமிழர்களும் உள்ளார்கள்.
No comments:
Post a Comment