7 Jun 2012

இடைக் கால இலக்கியம்& தற்கால இலக்கியம்

இடைக் கால இலக்கியம்

கி.பி 1200-இலிருந்து கி.பி 1800-வரையுள்ள காலப்பகுதி இடைக் காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் முகலாயர், நாயக்கர், மாராத்தியர், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் ஆகியோர் தமிழகப் பகுதிகளை ஆண்டனர். இக்காலமே தமிழ் இசுலாமிய இலக்கியம், தமிழ் கிறித்தவ இலக்கியம் ஆகியவற்றின் தோற்றக்காலம் ஆகும். முதல் தமிழ் அகரமுதலி, சதுரகராதி என்ற பெயரில், தமிழர்களால் வீரமாமுனிவர் என அறியப்படுகின்ற, இத்தாலி நாட்டைச் சேர்ந்தவரான வீரமாமுனிவர் என்று அறியப்படும் கிறித்தவ மத ஆசிரியரால் கி.பி 1732-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பெரும்பாலான நிகண்டுகள் இயற்றப்பட்டதும் இக்காலத்திலேயே.

தற்கால இலக்கியம்

18-ஆம் நூற்றாண்டு தொடக்கம் தமிழின் மறுமலர்ச்சிக் காலம் எனலாம். இக்காலத்திலேயே தமிழர்களின் இலக்கிய மரபு தமிழர்களுக்கே புலப்படத் தொடங்கியது. உ. வே. சாமிநாதையர், சி. வை. தாமோதரம்பிள்ளை, ஆறுமுக நாவலர் உட்பட பல தமிழறிஞர்கள் ஏட்டுத் தமிழ் இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்துப் பாதுகாத்தனர். 1916-ஆம் ஆண்டில் தமிழில் மிகுதியாகக் காணப்பட்ட சமற்கிருத சொற்களையும் மணிப்பிரவாள நடையையும் தடுக்க தனித் தமிழ் இயக்கம் தொடங்கப்பட்டது. தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் ஆகியோர் முன்னின்று தனித் தமிழ் இயக்கத்தைத் தொடங்கினர்.
தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிக் கவிஞராகச் சுப்பிரமணிய பாரதியார் கருதப்படுகிறார். இக்காலத்தில் புதுக் கவிதை பிறந்தது. உரைநடை வீச்சு பெற்றது. புதினம், சிறுகதை, கட்டுரை ஆகிய எழுத்து வடிவங்கள் தமிழில் வளர்ச்சி பெற்றன. 1954-1968 காலப்பகுதிகளில் தமிழ்க் கலைக்களஞ்சியம் பல அறிஞர்களின் கூட்டுழைப்பாக உருவாக்கப்பட்டது. தமிழ் இலக்கியத்தில் மரபு, மார்க்சிய, முற்போக்கு, நற்போக்குப் போக்குகள் இனங்காணப்பட்டன. திராவிட இயக்கத்தினர் தமிழைக் கருவியாக பயன்படுத்தித் தமது கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச்செல்வதில் பெரும் வெற்றி கண்டனர். தற்கலாத்தில் பெண்ணிய கருத்துகளையும் எடுத்துரைத்த அம்பை, மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சுகிர்தராணி, உமாமகேஸ்வரி, இளம்பிறை, சல்மா, வெண்ணிலா, ரிஷி, மாலதி (சதாரா), வைகைச்செல்வி, தாமரை உட்பட தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளும் வலுப்பெற்று இருக்கின்றன. உலகத்தமிழர்களின் எழுத்துகளும் தமிழ் இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளன. நாளிதழ், இதழ், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் எனப் பல்வேறு ஊடகங்களிலும் தமிழ் வேரூன்றிப் பரவி நிற்கின்றது. அறிவியல் தமிழின் அவசியம் அறிந்து தமிழ்நாடு அரசும் பிற அமைப்புகளும் அதை வளர்ப்பதைக் குறியாகக் கொண்டு செயற்பட்டு வருகிறார்கள். அதே வேளை தமிழ்நாட்டில் பரவலாகப் புழங்கும் தமிங்கிலம் தமிழ் மொழிப் பேணலை சரவலுக்கு உட்படுத்தியிருக்கிறது.

No comments:

Post a Comment