தமிழர் (Tamils,Tamilians) என்பவர் ஒரு தேசிய இனம்.தமிழர்களின் தாய் மொழி தமிழ் . தமிழர்கள் ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்ட தெற்காசிய திராவிட இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். மிகப் பழைய தமிழ்ச் சமுதாயங்கள் தென்னிந்தியா, இலங்கையைச் சேர்ந்தவைகள் ஆகும். உலகம் முழுவதிலும் இன்று தமிழர் பரவி வாழ்ந்தாலும் அவர்களது தாயகம் தமிழ்நாடும், தமிழீழமுமே
ஆகும். 1800-களில் பிரித்தானியக் குடியேற்றவாத அரசால் பெருந்தோட்டப்
பயிர்ச் செய்கைக்காகத் தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையின்
வடபகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளில் குடியேற்றப்பட்டார்கள். இவ்வாறே மொரிசியசு, மடகாசுகர், தென்னாபிரிக்கா
போன்ற ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள்.
20-ஆம் நூற்றாண்டில் தொழில் வாய்ப்புகள் பெற்று நடு ஆசிய நாடுகளுக்குச்
சென்று வசிக்கின்றனர். 1950-களின் பின்னர் தமிழர் தொழில் வல்லுனர்களாக
ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். 1983-இல் இலங்கை
இனக்கலவரங்களில் பாதிக்கப்பட்டுப் பெருமளவு ஈழத்தமிழர்கள் அசுத்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்சு, யேர்மனி, சுவிற்சர்லாந்து, டென்மார்க், நோர்வே
போன்ற நாடுகளிலும் சென்று வாழ்கிறார்கள். உலகில் 68 மில்லியன் மக்கள்
தமிழைத் தாய் மொழியாகவும், மேலும் 9 மில்லியன் மக்கள் தமிழை இரண்டாம்
மொழியாகவும் பயன்படுத்துவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment